டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணை வழியாக ஓமன் வளைகுடாவுக்குச் சென்றுள்ள அமெரிக்காவின் போர்க் கப்பல் மீண்டும் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடைப்பட்ட குறுகலான கடல்வழிப் பாதை£ன ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகின் 20 சதவீத எண்ணெய்க் கப்பல்கள் சென்று வருகின்றன.இதனையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் அடுத்தடுத்து பொருளாதாரத் தடைகளை விதித்ததை அடுத்து இந்த நீரிணையை மூடப் போவதாக ஈரான் மிரட்டியது. தொடர்ந்து அப்பகுதியில் கடந்த 10 நாட்களாக ஈரானின் கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் போர் பயிற்சி மேற்கொள்வதாக தெரியவந்தவுடன் பாரசீக வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்.ஜான் சி.ஸ்டென்னிஸ் என்ற போர் விமானந்தாங்கிக் கப்பல், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து ஓமன் வளைகுடாவுக்குச் சென்று விட்டது.
மேலும், ஈரான் கடற்படை தனது 10 நாட்கள் போர்ப் பயிற்சியை முடித்துக் கொண்ட பின் அந்நாட்டு இராணுவ உயர் அதிகாரி அடாவுல்லா சலேஹி நேற்று விடுத்த அறிக்கையில், இந்த பயிற்சி காரணமாகத் தான் அமெரிக்க கப்பல் நீரிணையைக் கடந்து சென்றதாகவும், இனிமேல் அந்தக் கப்பல் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது என்றும், அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுக்கிறது. ஏனெனில் மீண்டும் மீண்டும் இதுகுறித்து ஈரான் எச்சரிக்கை விடுக்காது என்றும் தெரிவித்தார்.
dinakaran