சென்னை: தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் செல்போன்களின் ஊடுருவலை தவிர்க்கும் வகையில், பொது தொலைபேசி வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றது.தமிழகத்தில் கடலூர், கோவை, சென்னை, வேலூர், சேலம், பாளையங்கோட்டை உட்பட பல இடங்களில் சிறைகள் உள்ளன. குற்ற செயல்களில் ஈடுபடுவோர் சிறைகளில் அடைக்கப்பட்ட பிறகு வெளியில் உள்ளவர்களுடன் பேச அனுமதி அளிக்கப்படுவதில்லை. அதனால் சிறைச்சாலைகளில் தொலைப்பேசி வசதி கிடையாது.
இதனால் சிறைவாசிகளை பார்க்க வருவோர், கைதிகளுடன் தொடர்பு கொள்ள செல்போன்களை திருட்டு தனமாக கொண்டு வருகின்றனர். சிறைச்சாலை காவலர்களின் சோதனையில் சில நேரங்களில் தப்பிவிடும் செல்போன்கள், கைதிகளின் கைகளில் எட்டிவிடுகின்றது.
இதன்மூலம் கைதிகள் சிறைகளில் இருந்து கொண்டு வெளிநபர்களுடன் எளிதில் தொடர்பு கொள்கின்றனர். இதனை தவிர்க்க சிறைச்சாலைகளில் திடீர் சோதனை, கைதிகளிடம் சோதனை, ரோந்து பணி உள்ளிட்ட பணிகளில் சிறை அதிகாரிகள் நடத்தினர். ஆனால் சிறைகளில் செல்போன்களின் ஊடுருவல் குறைந்தபாடில்லை.
இதனையடுத்து சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் பொது தொலைபேசி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதை தொடர்ந்து, அடுத்த 2 மாதங்களில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் பொது தொலைபேசிகள் அமைக்கப்பட உள்ளது.
இதன்படி சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள 2 பிரிவுகளில் 8 பொது தொலைபேசிகளும், பெண்கள் சிறையில் 1 போனும் அமைக்கப்பட உள்ளது. மேலும் வேலூர் சிறையில் 7 போன்களும், கடலூர் சிறையில் 3 போன்களும், திருச்சி மற்றும் கோவை சிறைகளில் 8 போன்களும் அமைக்கப்பட உள்ளது.
மதுரை மற்றும் சேலம் சிறைகளில் தலா 5 போன்களும், பாளையங்கோட்டை சிறையில் 6 போன்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி, வேலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் சிறைகளில் தலா ஒரு போன் அமைக்கப்பட உள்ளது.