டெல்லி: உத்தர பிரதேசத்தில் யானை சிலைகளை திரைபோட்டு மூடியுள்ளனர். அப்படி என்றால் குடியரசு தின விழா அணிவகுப்பில் யானைகள் இருக்காதா என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.உத்தர பிரதேசத்தில் தேர்தலை முன்னிட்டு ஆளும் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலைகளையும், அம்மாநில முதல்வர் மாயாவதியின் சிலைகளையும் திரை போட்டு மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அனைத்து சிலைகளுக்கும் திரை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 26ம் தேதி நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் யானைகள் இருக்காதா என்று குஜராத் முதல்வர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
குடியரசு தினத்தன்று வீர விருது பெறும் குழந்தைகளை யானை மீது அமர வைத்து அழைத்து வருவது வழக்கம். அந்த விழாவில் மட்டும் யானைகளைப் பயன்படுத்துவது தேர்தல் விதிகளை மீறுவது ஆகாதா?
குடியரசு தின விழா அணிவகுப்பில் யானைகளை பயன்படுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் கூறுமா? டிவி நேரடி ஒளிபரப்பு என்னவாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
யானைகளுக்கு திரை போட்டீர்கள், அடுத்ததாக எனது கட்சியின் சின்னமான லாந்தர் விளக்குகளை எல்லாம் உடைக்கப்போகிறீர்களா என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia