3 நாள் ஆகியும் இயல்பு வாழ்க்கை திரும்பாததால் கடலூர் மக்கள் அவதி

தானே புயல் தாக்குதலால் கடலூர் மாவட்டம் முழுவதுமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் தொடங்கி சிதம்பரம் வரை கடலோரப்பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களும் புயல் தாக்குதலால் சின்னாபின்னமாக ஆகி உள்ளன.

கடற்கரை அல்லாமல் உள்பகுதியில் உள்ள விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெல்லிக்குப்பம், நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமண்ணார்கோவில் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் முற்றிலும் மரங்கள் விழுந்துகிடப்பதால் இன்னும் போக்குவரத்து சீராகவில்லை.

பெரும்பாலான மின்கம்பங்கள் விழுந்துவிட்டதால் 3 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் குடிநீர் அத்தியவசிய தேவைக்கான தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

கடலூர் அருகே புயல் கரையை கடந்ததால் இந்த நகரம் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. எந்த பகுதியிலும் மின்சாரம் இல்லை. பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கூட மக்களுக்கு கிடைக்கவில்லை. வெளியூரில் இருந்து வரவேண்டிய காய்கறி, பெட்ரோல், டீசல் போன்றவை வரவில்லை.

ஒன்றிரண்டு பெட்ரோல் பங்கில் மட்டும் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பெட்ரோல் போடுகிறார்கள்.

மின் மோட்டார்கள் இயங்காததால் குடிநீர் சப்ளை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் சப்ளை செய்கிறார்கள். அது நகருக்கு போதியதாக இல்லை. எனவே லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இதற்காக சென்னை மற்றும் நெய்வேலியில் இருந்து 23 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. திருச்சியிலிருந்து 10 லாரிகள் வர உள்ளன.

ஆவின் நிறுவனம் நேற்று 2 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்தது. அது போதுமானதாக இல்லை. எனவே பால் கிடைக்காமல் மக்கள் அவதிபட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க மாவட்டம் முழுவதும் 27 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 14 ஆயிரம் பேருக்கு உணவு வளங்கப்பட்டு வருகிறது.

மின்சார துண்டிப்பை சரி செய்ய பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரவு பகலாக சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் நகரில் பாதிரிகுப்பம் பகுதியில் இன்று இரவுக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். மற்ற பகுதிகளுக்கு மின்சாரம் கிடைப்பதற்கு இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற நகரங்களிலும் முழுமையாக மின்சாரம் கிடைக்க 3 நாட்கள் வரை ஆகலாம். புயலுக்கு கடலூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வரமுடியாததால் ஆங்காங்கே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 11 துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் இல்லாததால் விளக்கு எரிப்பதற்காக கூடுதலாக 132 கிலோ லிட்டர் மண்எண்ணை கடலூருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

nakkheeran.in
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: