புதுச்சேரி: புதுவை மற்றும் காரைக்காலில் தானே புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று மாலை நடந்தது. பின்னர், முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தானே புயலால் புதுவை முழுவதும் பாதிக்காத பகுதிகளே இல்லை. கடலோர பகுதி முதல் கிராம பகுதி வரை முழுவதும் சேதமடைந்துள்ளது. புதுவை மற்றும் காரைக்காலில் நெல், வாழை, காய்கறி என மொத்தம் 17,012 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. புயலால், புதுவையில் உள்ள 75 சதவீத மரங்கள் சாய்ந்தன. புதுவையில் 8 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப அரசு உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறது. கோரிமேடு, பிருந்தாவனம், பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று(நேற்று) இரவுக்குள் மின்விநியோகம் செய்யப்படும். புயலால் இறந்தவர்களுக்கு தலா ஸீ2 லட்சம் வழங்க அரசு அறிவித்தது. அதேபோல், புதுவையில் உள்ள அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ஸீ2 ஆயிரம் புயல் நிவாரணமாக வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வழங்கப்படும். அது அல்லாமல், மீனவர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் ஸீ1,200, புதுவை அரசு வழங்கும் ஸீ600 என மொத்தம் ஸீ1,800 புயல் நிவாரண நிதியாக வழங்கப்படும். சங்க உறுப்பினர்களாக உள்ள மீனவர்கள் 30,265 பேர்களுக்கு இது வழங்கப்படும். இவ்வாறு ரங்கசாமி கூறினார். தானே புயலுக்கு புதுவை மற்றும் காரைக்காலில் மொத்தம் ஸீ1,500 கோடியில் இருந்து ஸீ2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாளை(இன்று) காலை 11 மணிக்கு புதுவை வருகிறார். பின்னர் அவர், கடலூர் சென்று அங்கும் சேத பகுதிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து, மீண்டும் புதுவை வந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.dinakaran.com