ஹெலிகாப்டரில் 10 நிமிடம் ஜெ. சுற்றிப் பார்த்தது தான் புயல் நிவாரணப் பணியா?- கருணாநிதி

Karunanidhi சென்னை: வெறும் அறிவிப்புகள் மட்டும் நிவாரணப் பணியாகிவிடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தானே புயல் மற்றும் மழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, அரசின் சார்பில் நிவாரணப் பணிகள் சரியாக நடக்கவில்லை என, நாள்தோறும் புகார்கள் வந்தபடி உள்ளன.

புயல் தாக்கி 10 நாட்களாகின்றன. சென்னை முதல் திருவாரூர் வரை காரில் பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினேன். திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து அதையும் வழங்கி விட்டேன்.

முதல்வர் ஜெயலலிதா அம்மையார் ஹெலிகாப்டரில் 10 நிமிடங்கள் சுற்றிப் பார்த்துவிட்டு, அரசின் சார்பில் ரூ.850 கோடி நிவாரணத்துக்காக ஒதுக்கியதாக அறிவித்தார். அதை அனைத்து ஏடுகளும் கொட்டையெழுத்துக்களில் வெளியிட்டுவிட்டன.

மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி தமிழகத்தின் சார்பில் நிதி உதவி கேட்டுள்ளனர். இதுதான் அரசின் புயல், மழை நிவாரணப் பணியாகும்.

இப்படியெல்லாம் அறிவித்துவிட்டால், அதுவே நிவாரணப் பணி நிறைவேறியதாக ஆகிவிடுமா?. சர்க்கரை என்று எழுதிக் காட்டினால், நாவில் இனிப்பு வந்துவிடுமா?

ஒவ்வொரு நாளும் ஓர் அறிவிப்பு என்ற முறையில் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை எதுவும் கிடைக்காததால் பென்னி குயிக்குக்கு மணிமண்டபம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கு உடனே சிலர் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையே மாற்ற வேண்டும் என்று நடவடிக்கை எடுக்கத் துணிந்த ஜெயலலிதா, பென்னி குயிக்குக்கு மணிமண்டபம் எழுப்பப் போகிறாராம்.

ஆனால் அரசுத் தரப்பில் நினைவூட்ட மறந்துவிட்ட செய்தி, திமுக ஆட்சியில் மதுரை பொதுப்பணித் துறை வளாகத்தில் அமைக்கப்பட்ட பென்னி குயிக் சிலையை 15.6.2000 அன்று முதல்வராக இருந்த நான் திறந்து வைத்தேன் என்பது. அந்தச் சிலை இன்றளவும் அங்கே உள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நக்கீரன் இதழில் முதல்வரைப் பற்றி கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டதற்காக, அந்த அலுவலகத்துக்குள் இரண்டு நாட்களாக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அதிமுக ஆட்சியிலே பத்திரிக்கைகளுக்கு எந்த அளவுக்கு மிரட்டல்கள், தாக்குதல்கள் உண்டு என்பதற்கு பல சான்றுகள் உண்டு.

அந்தக் கட்டுரையை நக்கீரனில் எழுதி, வெளியிடாமல் கூட இருந்திருக்கலாம் என்பது தான் நமது கருத்து. ஆனால், இதற்காக அந்த அலுவலகமே தாக்கப்பட வேண்டுமா என்று, நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கோபாலை கைது செய்ய, ராயப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் போலீசார் ரெய்டு நடத்தியது, அச்சகத்தில் டார்ச் லைட் மூலம் தேடிப் பார்த்தது, கோபாலின் தனி அறையில் உள்ள பாத்ரூமையும் விட்டு வைக்காமல் சோதனையிட்டது, கோபால் வீட்டுக்குச் செல்ல சுவர் மீது போலீசார் ஏறிக் குதித்தது ஆகிய படங்களையும் பிரசுரித்திருக்கின்றனர். இதுதான் காவல் துறையினர் சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றுகின்ற கடமை உணர்வா?.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: