அந்தமானில் சுற்றுலா பயணிகளுக்காக பழங்குடியின பெண்களை கட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம்

Andamans Jarawa டெல்லி:  அந்தமானில் உள்ள ஜராவா பழங்குடியின மக்களுக்கு உணவு கொடுத்து அவர்களை கட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம் ஆட வைத்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த நடனம் போலீசாரின் மேற்பார்வையில் தான் நடந்துள்ளது.

தெற்கு அந்தமானில் ஜராவா பழங்குடியினத்தைச் சேர்ந்த 403 பேர் வாழ்கின்றனர். அவர்களை சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து காக்க வேண்டிய போலீசாரே அவர்களை கட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம் ஆட வைத்துள்ளனர். இந்த வீடியோவை தி அப்சர்வர் என்ற இங்கிலாந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் ஒரு போலீசார் நான் தான் உங்களுக்கு உணவு கொடுத்தேனே. இப்பொழுது நடனம் ஆடுங்கள் என்கிறார். குட்டைப் பாவாடை மட்டும் அணிந்த அரை நிர்வாண பழங்குடியினப் பெண்கள் வெட்கப்பட்டு சிரிக்கின்றனர். ம் ஆடுங்கள் என்று அந்த போலீசார் கூறுகிறார். உடனே அவர்களும் மெதுவாக ஆடுகின்றனர். இதை அங்கு நின்று கொண்டிருக்கும் சுற்றுலாப் பயணிகள் வீடியோ எடுத்து ரசிக்கின்றனர்.

அந்த சுற்றுலாப் பயணிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் போலீசார் இவ்வாறு செய்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து இன்னும் 24 மணிநேரத்தில் அறிக்கை சமர்பிக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அநத வீடியோ கடந்த 2002ம் ஆண்டு எடுத்தது. அதை எடுத்தவர்கள் விதிமுறைகளை மீறியுள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தமான் டிஜிபி எஸ்பி தியோல் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வீடியோ அண்மையில் எடுக்கப்பட்டதாக தி அப்சர்வர் செய்தியாளர் கெதின் சாம்பர்லைன் தெரிவித்துள்ளார். வெறும் ரூ.15,000த்தை போலீசாருக்கு லஞ்சமாக கொடுத்து தான் பழங்குடியினப் பெண்களை நடனம் ஆடச் செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: