சொந்த ஊரில் பொங்கல் கொண்டாட ஆர்வம் பஸ், ரயில்களில் மக்கள் வெள்ளம்

 சென்னை : சொந்த ஊரில்  பொங்கல் திருநாளைக் கொண்டாட பல ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று ஒரே நாளில் புறப்பட்டதால், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு, தாம்பரம் பஸ் நிலையங்கள் நிரம்பி வழிந்தன. போகி பண்டிகையுடன் இன்று தொடங்கும் பொங்கல் விழா, 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 4 நாட்கள் விடுமுறை என்பதால், சொந்த ஊரில் உறவினர்களுடன் விழாவை கொண்டாட குடும்பம், குடும்பமாக மக்கள் ஆர்வமாக புறப்பட்டுச் சென்றனர். சிறப்பு ரயில்கள் அறிவித்த சில நிமிடத்திலேயே முன்பதிவு தீர்ந்து விட்டதால், அரசு மற்றும் தனியார் பஸ்களில் மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், பொங்கலுக்கு மொத்தமாக 5,000 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று இரவு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 1,257 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 1965 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 15ம் தேதி தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோயம்பேடு மட்டுமல்லாமல் தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்தும் ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கும் கூட்டம் நிரம்பி வழிந்தன. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சில வேன் உரிமையாளர்கள் திருச்சி, புதுவை, விழுப்புரம், சேலம், வேலூர் ஆகிய இடங்களுக்கு அதிக பணம் வாங்கிக் கொண்டு இயக்கினர்.

அதேபோல தனியார் நிறுவனங்கள் தினமும் 300 பஸ்களை இயக்கும். நேற்று கூடுதலாக பழைய பஸ்களை தூசி தட்டி 100 பஸ்களை இயக்கினர். கட்டணமும் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்பட்டன. அந்தக் கட்டணத்தை கொடுத்து செல்லவும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். ஆனாலும், அங்கும் டிக்கெட் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் சுற்றி, சுற்றி வந்தனர். அரசு பஸ் கட்டணத்தை காட்டிலும், ஆம்னி பஸ்களில் இரு மடங்குக்கு மேலான கட்டணம் வழக்கம்போல வசூலிக்கப்பட்டது. 

எழும்பூர், சென்ட்ரல் ரயில்நிலையங்களில் நேற்று முன்தினம் இரவு பாண்டியன், நெல்லை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பட்டபோது மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். பலர் தொங்கியபடியே பயணம் செய்தனர். நேற்று காலை எழும்பூரில் இருந்து புறப்பட்ட குருவாயூர், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பட்டபோது கூட்டம் காணப்படவில்லை. குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பல இருக்கைகள் காலியாகவே இருந்தன.

அதே நேரத்தில், நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்ட எழும்பூர்& நாகர்கோவில் சிறப்பு ரயிலுக்காக கணிசமான கூட்டம் காத்திருந்தது. எழும்பூரில் இருந்து இரவில் புறப்படும் வழக்கமான ரயில்களில் கூட்டம் அலைமோதியது. அதுமட்டுமின்றி, அறிவிக்கப்பட்ட வெறும் 6 பொங்கல் சிறப்பு ரயில்களில் 4 சென்ட்ரலில் இருந்து இயக்கப்படுகின்றன. அதனால் எழும்பூரில் கூட்டம் குறைவு. எழும்பூரில் இருந்து புறப்பட்ட 2 நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் உட்பட அனைத்து சிறப்பு ரயில்களும் அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் என சுற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் காலதாமதம் ஏற்படும் என்பதாலும், பஸ்களை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 

வேறு வழியில்லை என்பதால் கூட்டம் சென்ட்ர லுக்கு படை எடுத்தது. அதனால், இந்த முறை எழும்பூரை விட சென்ட்ரலில் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்ட்ரலில் இருந்து நேற்று இரவு 10.30 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்ட ரயிலிலும் நல்ல கூட்டம். முன்பதிவு செய்யப்படாத 2ம் வகுப்பு பெட்டிகளில் நிற்கக்கூட இடம் இல்லாமல் பயணிகள் படாதபாடு பட்டனர். எஞ்சியிருக்கும் ஒரே பொங்கல் சிறப்பு ரயிலான நாகர்கோவில் ரயில், இன்று இரவு 8 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படுகிறது.

தனியார் கட்டண விவரம்

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ஆம்னி பஸ்களில் அதிக  கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன் விவரம்:

ஊர்    ப.க ரூ.    பு.க ரூ.

திருச்சி    400    600
மதுரை    500    800
கோவை    500    800
ஈரோடு    500    700
சேலம்    450    600
நெல்லை    600    900
பெங்களூர்500    800
தஞ்சை    400    600
நாகை    400    600


dinakaran
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: