
சென்னை, ஜன.14 - புரட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரால் ஏழை எளிய மக்களுக்காக தொடங்கி வைக்கப்பட்ட, பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை இந்தாண்டும் முதல்வர் ஜெயலலிதா நடைமுறைப்படுத்தியுள்ளார். பொங்கலுக்காக தமிழகம் முழுவதும் 3 கோடியே 41 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ள விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் பணியை, முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
விவசாயத்தை அடுத்து கிராம மக்களின் வாழ்வாதாரத் தொழிலாகச் செய்யும் தொழில்களில் நெசவுத் தொழில் முதன்மைப் பெற்று விளங்குகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்கவும், தேக்கமடைந்துள்ள துணிகளை விற்பனை செய்யவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாக்குவதற்காகவும், 1981ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி சேலைத் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டிச் சேலை வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கும் ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் மூலம் தரமான வேட்டி சேலைகளை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முதன் முறையாக 2003ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பருத்தி நூலுடன் பாலியெஸ்டர் நூல் கலந்து வேட்டிகள் மற்றும் சேலைகள் உற்பத்தி செய்து வழங்க ஆணையிட்டார்.
அதன்படி தொடர்ந்து வேட்டி வேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2005ஆம் ஆண்டு மாநிலத்திலுள்ள அனைத்து ஏழை எளிய மக்கள் இந்த பயனைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மேலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு (2012) பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 கோடியே 70 லட்சத்து 84 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 69 லட்சத்து 75 ஆயிரம் வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (13.1.2012) தலைமைச் செயலகத்தில், பொங்கல் திருநாளையொட்டி இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 7 பயனாளிகளுக்கு வேட்டி சேலைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வருவாய் துறை முதன்மைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், கைத்தறி கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்த்துறைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
thinaboomi