
சென்னை: திமுக எம்பியும் கலைஞர் டிவியின் 20 சதவீத பங்குகளை வைத்திருப்பவருமான கனிமொழிக்கே தெரியாமல் கலைஞர் டிவியின் இயக்குனராக திமுக பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளரான பி.வி.கல்யாணசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி இவர் இயக்குனர் குழுவில் ஒருவராக சேர்க்கப்பட்டதோடு, நிறுவனத்தின் கூடுதல் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த 10 நாட்களில் இவர் இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டார்.
இவையெல்லாம், கனிமொழி திகார் சிறையில் இருந்தபோது, அவருக்கே தெரியாமல் நடந்து முடிந்துவிட்டனவாம். அதே போல கலைஞர் டிவியின் 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிர்வாகியான சரத்குமாருக்கும் இது தெரியாதாம். அவரும் அப்போது சிறையில் தான் இருந்தார்.
பி.வி.கல்யாணசுந்தரம் கலைஞர் டிவி இயக்குனராக நியமிக்கப்பட்ட விஷயம் 3 மாதங்களுக்குப் பின் இப்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது.
கலைஞர் டிவியின் நிறுவன இயக்குனர்களான திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனர் பதவிகளிலிருந்து விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
முதலில் தயாளு அம்மாள் விலகிவிட, ராஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டதையடுத்து கனிமொழியும் இயக்குனர் குழுவில் இருந்து விலகினார். கலைஞர் டிவியின் இயக்குனர் குழுவில் வெறும் 13 நாட்கள் தான் இருந்தார் கனிமொழி.
திமுகவின் இரு அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான பி.வி.கல்யாணசுந்தரம், ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராவார். வழக்கறிஞரான இவர் திமுகவின் சட்டப் பிரிவில் தீவிரமாக பணியாற்றி, பின்னர் அமைப்புச் செயலாளராக உயர்ந்தவர் ஆவார்.
கடந்த 2005ம் ஆண்டு தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது. டாடா கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் ஒரு உறுப்பினராக பி.வி.கல்யாணசுந்தரமும் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது டாடா கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் விஎஸ்என்எல் என்ற பெயரில் இயங்கியது. மத்திய அரசுக்கும் அப்போது அதில் 26 சதவீத பங்குகள் இருந்தன.
2008ம் ஆண்டு வரை பி.வி.கல்யாணசுந்தரம் இந்தப் பொறுப்பில் இருந்தார். இதையடுத்து மீண்டும் அவருக்கு 3 ஆண்டுகள் பதவி நீட்டிக்கப்பட்டது, ஆனால், இவரது பதவிக் காலம் முடிய ஓராண்டுகள் இருக்கும்போதே இவர் அந்தப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் ஸ்டாலினுடன் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு வந்த கருணாநிதி, அங்கு மூத்த அதிகாரிகளை துருவி எடுத்ததாகவும், டிவியின் வருமானம் பெருமளவு சரிந்துவிட்டது குறித்து கேள்வி எழுப்பியதாகவும் தெரிகிறது.
இதையடுத்து தொலைக்காட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்தை ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கலாம் என ஸ்டாலின் யோசனை கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் விரைவிலேயே ஒரு அதிகாரி நியமிக்கப்படலாம் என்கிறார்கள்.