போபால், ஜன.2- மத்திய பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிகளில் “வசூல்ராஜா” சினிமா பாணியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்ந்தது மாதிரி பல் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பிலும் மோசடிகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில் மோசடிகள் நடப்பதாக டாக்டர் ஆனந்த் ராய் என்பவர் கடந்த 2009-ல் மருத்துவ துறைக்கு புகார் அனுப்பினார். இதுபற்றி விசாரணை நடத்த மாநில மருத்துவ துறை செயலாளர் தலைமையில் உயர்நிலைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த குழு விசாரணை நடத்தி கடந்த டிசம்பரில் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் 6 மருத்துவக் கல்லூரிகளில் “வசூல்ராஜா” சினிமா பாணியில் 114 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மிகவும் வசதியும், அதிகார பின்னணியும் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
மருத்துவப் படிப்புக்கான நுழைவு தேர்வை எழுத, வேறு நபர்களை பயன்படுத்தி உள்ளனர். உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளம் டாக்டர்கள், அறிவார்ந்த மருத்துவ மாணவர்களை அழைத்து வந்து நுழைவு தேர்வை எழுத வைத்துள்ளனர். இதற்காக “ஹால் டிக்கெட்”டில் வெளியான போட்டோவையும், கையெழுத்தையும் பயன்படுத்தி இருக்கின்றனர்.
நுழைவு தேர்வு எழுதியவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வாடகை தரப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை தொடர்ந்து 56 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 50 பேர் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மற்றவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவ கல்விதுறை அறிவித்தது.
மேலும் இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் “வசூல் ராஜா” சினிமா பாணியில் எம்.பி.பி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்தது போன்று பல்மருத்துவம், கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளிலும் மோசடி நடந்துள்ளது இப்போது தெரிய வந்துள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்புகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் பல் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர இதே பாணியை கடைப்பிடித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ். வழி முறையை பின்பற்றி வெளி மாநிலங்களில் இருந்து கூலி ஆட்களை கொண்டு வந்து நுழைவு தேர்வு எழுதி பல் மருத்துவம் (பி.டி.எஸ்.) கால்நடை மருத்துவம் (பி.வி.எஸ்.சி.) ஆகிய படிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த மோசடியான செயல் பற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பற்றி டாக்டர் ஆனந்த்ராய் கூறுகையில், பல் மற்றும் கால்நடை படிப்புகளில் சேர்ந்தவர்கள் பற்றி 2009-ல் இருந்தே விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மைகள் தெரியவரும் என்றார். மத்தியபிரதேச மாநில தொழிற்கல்வி தேர்வுகள் வாரிய தலைவர் பங்கஜ் திரிவேதியிடம் இதுபற்றி கேட்டபோது, போலி மாணவர் சேர்க்கை பற்றி கண்டறிவதும், நடவடிக்கை எடுப்பதும் அரசு மற்றும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் வேலையாகும்.
இதில் எங்கள் பங்கு எதுவும் கிடையாது என்று கூறினார்.
மருத்துவக் கல்விதுறை முதன்மை செயலாளர் ஐ.எஸ்.தானியிடம் கேட்ட போது, நான் தற்போது விடுமுறையில் இருக்கிறேன். அலுவலக விஷயங்கள் பற்றி இப்போது பேச இயலாது என்று சொல்லி விளக்கம் அளிக்காமல் தவிர்த்தார்.
maalaimalar.com