கராச்சி: பாகிஸ்தானில் ராணுவம் - பிரதமர் இடையிலான மோதல் வலுத்து வருகிறது. கருத்து வேற்றுமை இன்னும் முடிவுக்கு வராததால் அந்நாட்டில் ராணுவம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கபோகிறதோ என்ற எதிர்பார்ப்பு உலக அரசியலில் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிபர் சர்தாரி திடீரென இன்று துபாய் செல்ல திட்டமிட்டுள்ளார். இது மருத்துவ ரீதியான பயணம் என்றும் , அதில் அரசியல் இல்லை என்றும் அவரது நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. இருப்பினும் குழப்பம் உள்ள சூழலில் அவர், துபாய் செல்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.அதிபர் சர்தாரி மீதான ஊழல் குறித்து பாக்., பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் கருத் வெளியிட்டது. இந்த கருத்துக்கு பதில் அளித்த ராணுவம் மற்றும் ஐ.எஸ்.,ஐ., பிரதமருக்கு எதிராக இருந்தது. இதனால் அரசு , கோர்ட், மற்றும் ராணுவம் இடையே மோதல் தொற்றிக்கொண்டது. இதனையடுத்து பாதுகாப்பு செயலர் ரயீம் காலித் லோதியை, பிரதமர் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால் மேலும் விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த ராணுவ தளபதி கயானி உயர் கமாண்டர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் . இதனால் பாகிஸ்தானில் மீண்டும் ஒரு முறை ராணுவ ஆட்சி வருமோ என்ற சூழல் எழுந்துள்ளது.
பிரதமர் கிலானி நாட்டில் ஜனநாயகம் நீடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் பார்லி., அவசர கூட்டத்தை அவர் கூட்டியிருக்கிறார்.
பாகிஸ்தானை பொறுத்தவரை சுதந்திரம் அடைந்தது முதல் இது வரை 4 முறை ராணுவ ஆட்சி நடந்திருக்கிறது. இதன்படி அயூப்கான், யாக்யாகான், ஜியா அல் ஷக், பர்வேஸ் முஷாரப் ஆகியோர் தலைமையில் ராணுவம் ஆட்சி செய்தது. பாகிஸ்தானில் எழுந்துள்ள பிரச்னையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
பின்லாடன் அமெரிக்காவால் கொல்லப்பட்ட விஷயம், பாக்கில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி உள்ளிட்ட விஷயங்களால் எற்கனவே அரசு- ராணுவம் இடையே கருத்து வேற்றுமை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
dinamalar