முல்லைப் பெரியாறு அணை: உறுதி ஆய்வு செய்யும் 12 பேர்

முல்லைப்பெரியாறு அணையின் உறுதித்தன்மையை ஆராய்வதற்காக, ராட்சத எந்திரங்கள் மூலம் அணையில் துளையிட்டு,  ஏற்கனவே அணையை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்,  சுண்ணாம்பு கலவைகளை எடுத்து சோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 


தமிழ்நாட்டில் உள்ள தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களில் விவசாயத்துக்கு பெரிதும் பயன்பட்டு வருவது முல்லை பெரியாறு அணை. இந்த அணை பலம் இழந்து விட்டது என்று கூறி, புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேரளா வற்புறுத்தி வருகிறது. 
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 5 உறுப்பினர்களை கொண்ட உயர் அதிகார குழு ஒன்றை  சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.

ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் இருமாநில பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஐவர் குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் கடந்த மாதம் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.



அப்போது அணையின் உறுதி தன்மையை அறிவதற்காக அணை யில் சில இடங்களில் துளையிட்டு, அணையை கட்ட ஏற்கனவே பயன்படுத்திய மண், சுண்ணாம்பு மற்றும் கலவைகளை எடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கேரள அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதனால் முல்லைப்பெரியாறு அணை மற்றும் முல்லைப்பெரியாறு பேபி அணையில் 5 இடங்களில் துளையிட்டு ஆய்வுக்காக மண் மற்றும் சுண்ணாம்பு மாதிரி எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 1700 அடி நீளம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் 330, 475, 650, 950 அடி என 4 இடங்களிலும், 240 அடி நீளம் கொண்ட பேபி அணையின் மையப்பகுதியிலும் சேர்த்து மொத்தம் 5 இடங்களில் துளையிடுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

துளையிட தேர்வு செய்யப்பட்ட இடங்களை மத்திய மண்வள மற்றும் நீர் ஆராய்ச்சி மைய இயக்குனர் தேசாய் தலைமையிலான குழுவினர் சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர்.

பின்னர் அணையின் குறிப்பிட்ட இடங்களில் துளையிடுவதற்காக, ராட்சத துளையிடும் எந்திரங்கள் அணைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரம் மராட்டிய மாநில அரசின் தொழில்நுட்ப என்ஜினீயர் சாங்கிரி தலைமையிலான குழுவினர் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்று அணையில்  எந்தெந்த இடங்களில் துளையிட வேண்டும் என்று பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து தொழில்நுட்ப என்ஜினீயர் சாங்கிரி தலைமையில் உதவி பொறியாளர் பிரஜித் ஆகியோர் அணையில் துளையிடும் பணிகளை தொடங்குவதற்காக நேற்று காலை பெரியாறு  அணைக்கு சென்றனர். அவர்களுடன் தொழில்நுட்ப உதவியாளர்கள் 4 பேரும், உதவியாளர்கள் 8 பேரும் சென்றனர்.
 
nakkheeran
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: