கோவில் அர்ச்சகர் வீட்டுக்குள் பதுங்கியிருந்த ராஜபக்சே மைத்துனர்-விரட்டி்ச சென்று சரமாரி செருப்படி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த ராஜபக்சேவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் சாதாரணமாக தாக்கப்படவில்லை, மாறாக சரமாரியாக செருப்புகளால் தாக்கப்பட்ட விவரம் தற்போது முழுமையாக தெரிய வந்துள்ளது.

ராஜபக்சேவின் சகோதரி நிரூபமாவின் கணவர்தான் நடேசன். அடிக்கடி தமிழக கோவில்களுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுச் செல்வார். அந்த வகையில் நேற்று முன்தினம் அவர் ராமேஸ்வரம் வந்திருந்தார்.அங்கு ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினார்.

நேற்று அதிகாலையில் அவர் கோவிலுக்கு வருவதாக இருந்தது. இந்தத் தகவல் நாம் தமிழர் கட்சி மற்றும் மதிமுகவைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாலையிலேயே அவர்கள் கோவில் முன்பு திரண்டனர். ஆனால் நடேசனைக் காணவில்லை.

எங்கிருக்கிறார் என்று பல பகுதிகளுக்கும் சென்று தீவிரமாக தேடினர். ஆனால் எங்கும் இல்லை, விடுதியிலும் அவரைக் காணோம். இந்த நிலையில்தான் மேலவாசல் பகுதியில் உள்ள ஆனந்த தீட்சிதர் என்ற அர்ச்சகர் வீடடில் நடேசன் பரிகார பூஜையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்தனர் தொண்டர்கள்.

50க்கும் மேற்பட்டோர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடேசன் வெளியே வந்தார். வெளியே கூடியிருந்தவர்களிடம் நான் அந்த நடேசன் இல்லை, ராஜபக்சே மைத்துனர் அல்ல என்று கூறியுள்ளார். ஆனால் அவரை நன்கு தெரிந்து வைத்திருந்த காரணத்தால் தொண்டர்கள் கோபாவேசத்துடன், இலங்கையில் தமிழர்கள் நிறுவிய கோயில்களை அகற்றிவிட்டு புத்த விகாரமாக மாற்றி வருவது ஏன் என்று கேட்டனர்.

ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை, நீங்கள் வேண்டுமானால் அங்கு வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். இதையடுத்து சிலர் நடேசன் மீது செருப்புகளை தூக்கி அடித்தனர். இதைப் பார்த்துப் பயந்து போன நடேசன் வீட்டுக்குள் ஓடினார். இதையடுத்து தொண்டர்களும் உள்ளே புகுந்து நடேசனை மடக்கிப் பிடித்து சரமாரியாக செருப்புகளால் அடித்தனர். துரோகி என்றும் கூக்குரலிட்டனர்.

தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். தாக்குதலில் ஈடுபட்டதாக மதிமுக, நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த 7 பேரைக் கைது செய்தனர்.

tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: