தி. நகரில் `சீல்' வைக்கப்பட்ட கடைகள் திறப்பு: கடை உரிமையாளர்கள் கொண்டாட்டம்

T Nagar Shop சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சென்னை தியாகராயநகரில் `சீல்' வைக்கப்பட்ட 28 கட்டிடங்கள் செவ்வாய்கிழமை மாலை திறக்கப்பட்டன. பொங்கல் வியாபாரத்திற்காக கடை திறக்க அனுமதி கிடைத்துள்ளதால் கடை உரிமையாளரும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தியாகராயர் நகரில் உள்ள பல வணிக வளாக கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும், சிவிக் ஆக்ஷன் என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு குழுவை அமைத்தது. இந்த குழுவினர் ஆய்வு நடத்தி தியாகராயநகரில் உள்ள பல கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி ரெங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் உள்ள பெரிய வணிக வளாகங்கள் உள்பட, 28 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

71 நாட்கள் போராட்டம்

சீல் வைக்கப்பட்ட இந்த பெரிய கட்டிடங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் அடங்கும். கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது மட்டும் அல்லாமல், கடைகளின் மின்சாரம், குடிநீர் இணைப்பு ஆகியவற்றின் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்து விட்டனர்.

இதனால் கடைகளில் வேலை பார்த்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தங்களின் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். கடைகள் மூடப்பட்டதால் தி.நகர் பகுதி வியாபாரிகள் மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.

சீல் வைக்கப்பட்ட கடைகளை திறப்பதற்கு வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடையை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி கோரி தி.நகர் வியாபாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக 6 வாரகாலம் திறந்திருக்கலாம் என திங்கட்கிழமையன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 71 நாட்களாக கடைகள் திறக்கப்படாமல் மூடிகிடந்ததால், இதனால் வியாபாரிகளுக்கு ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது. எப்போது கடைதிறக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வியாபாரிகளும், ஊழியர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

நகல் கிடைப்பதில் தாமதம்

இதனையடுத்து செவ்வாய்கிழமை காலையே ரங்கநாதன் தெருவில் பணியாளர்களும், கடை உரிமையாளர்களும் குவிந்தனர். ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவு நகல், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அதிகாரிகள், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கையில் கிடைக்கவில்லை. தங்களுக்கு நீதிமன்ற உத்தரவு நகல் கிடத்தால்தான் கடைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

இதனையடுத்து செவ்வாய்கிழமை மதியம் 1 மணிக்கு மேல் உச்சநீதிமன்ற நகலை பெற்றுக்கொண்டு விமானம் மூலம் சென்னை வந்த வியாபாரிகள், சிஎம்டிஏ அதிகாரிகளிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் அந்த நகலை அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, மாலை 5 மணியளவில் தியாகராயநகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சென்னை பெருநகர வளர்ச்சி குழும துணை திட்ட அமைப்பாளர் மோகன்ராஜ் தலைமையில், 6 அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட கடைகளை ஒவ்வொன்றாக திறந்தனர். முதலாவதாக உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ், குமரன் நகைக்கடை திறக்கப்பட்டது.

பட்டாசு வெடித்த ஊழியர்கள்

இதைத்தொடர்ந்து சரவணா ஸ்டோர், ரத்னா ஸ்டோர், ஜெயச்சந்திரன் உள்பட சீல் வைக்கப்பட்ட 28 கட்டிடங்களில் உள்ள கடைகளும் திறக்கப்பட்டன. ஒவ்வொரு கடைகளையும் திறந்தபோது, கடை ஊழியர்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒருசில கடைகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். ஒருசில இடங்களில் ஊழியர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மின்சார இணைப்பு, குடிநீர்

கடைகள் திறக்கப்பட்டுவிட்டாலும், ஒருசில கடைகளில் மின்சார இணைப்பும், குடிநீர் இணைப்பும் கொடுக்கப்படவில்லை. புதன்கிழமை அனைத்து கடைகளுக்கும் மின்சார இணைப்பும், குடிநீர் இணைப்பும் கொடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று முதல் கடைகளில் புதுப்பொலிவுடன் பொங்கல் வியாபாரத்தை தொடங்கலாம் என்றும் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெறும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: