இஸ்லாமாபாத் : அணுமின் நிலையங்கள் குறித்த தகவல்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன. கடந்த, 1988ல் இரு நாடுகளுக்கிடையில் கையெழுத்தான, அணுமின் நிலையங்கள் மற்றும் அணு சக்தி அமைப்புகள் மீதான தாக்குதலைத் தடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தப்படி, இரு நாடுகளும் ஆண்டு தோறும் ஜனவரி 1ம் தேதி, தங்கள் நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் மற்றும் அணு சக்தி அமைப்புகள் குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம், 1992 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தப்படி, நேற்று இரு நாடுகளும் தங்களது, அணுமின் நிலையங்கள் மற்றும் அணு சக்தி அமைப்புகள் குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொண்டன. இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. சமீபத்தில், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில், பரஸ்பரம் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலான பேச்சுவார்த்தை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.