மின்னணு வாக்கு இயந்திரங்கள் 100% பாதுகாப்பானவை அல்ல: டெல்லி ஹைகோர்ட்


டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நூறு சதவிகிதம் பாதுகாப்பானவை அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் மாற வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியும், மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறவேண்டும் என்றும் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இயந்திர வாக்குப்பதிவு முறையை அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நிராகரித்துவிட்ட நிலையில், அங்கு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வாறு நம்பகத்தன்மை கொண்டவையாக இருக்கும் என்றும் சுப்ரமணிய சாமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ராஜீவ் சஹாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை அல்ல என்று தெரிவித்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்படவில்லை என்றும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்து நிலவும் சந்தேகங்களை முழுமையாக தீர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

எனினும், ஓட்டு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தலாம் என்பதற்கும் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி சாமியின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.

tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: