புதுச்சேரி: புதுச்சேரியில் சுனாமியை காட்டிலும் தானே புயல் பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை - கடலூர் அருகே தானே புயல் கரையை கடந்த போது பெரும் சேதத்தை விளைவித்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான கால்நடைகள் பலியாயின. நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமாகி உள்ளது. மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சரிந்துள்ளன. 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட கூரைவீடுகள் சிதைந்துள்ளன. சேதம் குறித்த விவரங்களை அரசின் பல்வேறு துறைகள் இணைந்து முதல் கட்டமாக மதிப்பீடு செய்துள்ளனர்.சேத விவரம் குறித்த இடைக்கால அறிக்கையை மத்திய அரசுக்கு அதிகாரிகள் அனுப்பி உள்ளனர். இதில் புயல் சேத நிவாரணத்துக்காக ரூ.2500 கோடி நிதி அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு விரைந்து நிதி உதவி அளிக்க வலியுறுத்தி முதலமைச்சர் ரங்கசாமி விரைவில் புதுடெல்லி செல்ல உள்ளார். அப்போது பிரதமர் மன்மோகன்சிங், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை நேரில் சந்தித்து உரிய நிவாரண நிதி வழங்கவேண்டும் என்று வலியுறுத்த உள்ளார்.
dinakaran.com