போக்குவரத்து விதிகளை கடுமையாக்க வகை செய்யும் புதிய மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்த மசோதா விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை பெருகி வருவதால் அதே அளவுக்கு விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து விதிமீறல்கள்தான் பெரும்பான்மையான விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசியபடி வண்டி ஓட்டுவது உள்பட தனி மனித தவறுகள் காரணமாக விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதை தடுப்பதற்கு மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதன்படி, கடுமையான விதிமுறைகளுடன் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த புதிய மதோதா நிறைவேற்றப்பட்டால், தற்போதுள்ளதைவிட பத்து மடங்கு அளவுக்கு அதிக அபராதங்கள் விதிக்கப்படும். புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவில் குறிப்பாக, குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு கடும் தண்டனைகளை வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.வாகன ஓட்டியின் 100 மில்லி ரத்தத்தில் 10 முதல் 30 மில்லி அளவுக்கு ஆல்கஹால் இருந்தால் ரூ.5,000 அபராதம் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தவிர, டிரைவிங் லைசென்ஸை சிறிது காலத்துக்கு ரத்து செய்யலாம்.
தவிர, வாகன ஓட்டியின் 100 மிலி ரத்தத்தில் 150 மில்லி அளவுக்கு ஆல்கஹால் இருந்தது தெரிந்தால், ரூ.10,000 வரை அபராதமும், 6 மாதங்கள் கடுங்காவல் சிறை அல்லது இரண்டையும் சேர்த்தும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகத்தி்ல் தாறுமாறாக வாகனங்களை ஓட்டுவோருக்கும் அபராதங்கள் மற்றும் கடும் தண்டனைகள் கிடைக்கும்.
மேலும், செல்போன் பேசியபடி வண்டி ஓட்டினால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்தால் அவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யும் வகையில் இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.