
பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதை உலகிற்கு எடுத்துக் காட்டிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஷெர்வுட் ரோலண்ட், 84, நேற்று காலமானார்.சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள், பூமியில் நேரடியாகப் பட்டுவிடாமல் ஒரு வலையைப் போல் பாதுகாத்து வருவதுதான் ஓசோன் மண்டலம். இந்த மண்டலத்தின் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானி பால் கிரட்ஸனின் ஆய்வின் அடிப்படையில், ரோலண்டும், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் மரியோ மொலினாவும் மேலும் சில ஆய்வுகளை நடத்தினர். வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு ஸ்பிரே பொருட்கள் மூலம் வெளியேறும் குளேரோபுளோரோகார்பன் என்ற வேதிப் பொருள், இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து வெளியேறினால், அது ஓசோன் மண்டலத்தைச் சீர் குலைத்து பூமியின் அழிவுக்கு வித்திடும் என, இவர்கள் தங்கள் ஆய்வுகள் மூலம் கண்டறிந்தனர்.ரோலண்டின் இந்தக் கண்டுபிடிப்பிற்காக, 1995ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சமீப காலமாக பார்க்கின்சன் என்ற நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று காலமானார்.