சென்னை விமான நிலையத்தில் மஸ்கட்டில் இருந்து வந்த பயணிகள் மறியல்:


மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 6 மணிக்கு சென்னை வந்தது. விமானத்தில் வந்த 207 பயணிகள் குடியுரிமை சோதனைக்கு பின் தங்கள் லக்கேஜ் பெட்டிகளை எடுப்பதற்காக கன்வேர் பெல்ட் அருகே காத்திருந்தனர். நீண்ட நேரமாக காத்து நின்றும் அவர்களது லக்கேஜ் வரவில்லை. 
இதுபற்றி அவர்கள் விமான நிலைய அலுவலகத்தில் புகார் செய்தனர். அவர்கள் ஓமன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் கேட்கும்படி கூறினார்கள். ஓமன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் கேட்டபோது அவர்கள் திருப்திகரமான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த விமான பயணிகள் விமான நிலையத்தின் வாசலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். லக்கேஜ் வந்து சேராததை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் விமான நிலையத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. 
 பயணிகளுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினார்கள். லக்கேஜ் வந்து சேராதது குறித்து மஸ்கட் விமான நிலையத்தில் கேட்டபோது, சரக்கு ஏற்றுபவர்கள் போராட்டம் நடத்தியதால் லக்கேஜ் அனுப்பப்படவில்லை என்று தெரிய வந்தது. லக்கேஜ் நாளை அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் பயணிகள் இதனை ஏற்கவில்லை. லக்கேஜ் வரும்வரை எங்கே தங்குவது என்று கேட்டனர். சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ளவர்களுக்கு லக்கேஜ் வந்ததும் டோர் டெலிவரி செய்வதற்கும், வெளியூர் செல்பவர்கள் சென்னை ஓட்டலில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 
இதை ஏற்று சென்னையை சேர்ந்த 147 பயணிகள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். திருச்சி, மதுரை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 60 பேர் ஓட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பயணிகள் மறியலால் விமான நிலையத்தில் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது. 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: