சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் அனல் கிளப்பிக்கொண்டிருக்கிறது. திமுகவின் முக்கியப் புள்ளிகளும், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் இங்கே முகாமிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப் படுத்தினாலும், அதிமுகவிலோ 32 அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எம்பிக்கள் என 42 பேர் கொண்ட குழு, தொகுதிகளை பல பகுதிகளாக பிரித்துக்கொண்டு முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதனிடையே வாக்காளர்களுக்கு இலவசமாக தரப்படும் வேஷ்டி, சேலை, பணம் போன்றவைகள் அரசியல் கட்சிகளில் இருந்து பறக்கும் படையினர் சோதனை மூலம் பறிமுதல் செய்து கொண்டிருக்கின்றனர்.
இது ஒரு பக்கம் நடந்தாலும், குருவிக்குளம் ஒன்றியம் சங்கரன்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுந்தரேசபுரம், அழகு நாச்சியா புரம், அழகனேரி, ஆண்டார்குளம், சேர்ந்த்மரம், கடையாலுருட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடுஇரவில் வாக்காளர்களுக்கு இலவசமாக வேட்டி சேலை, பணம் கொடுக்கும் வேலையும் அமர்க்களப்படுகிறது.
அதோடு, 8 மணி நேர மின்தடையால் விவசாயமும், தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டு வருமானம் அடியோடு நசித்து போயிருப்பதால், மக்கள் அதிருப்தியுடன் இருப்பதை அறிந்துகொண்டார்கள் அமைச்சர்கள்.
மின்தடை நீடித்தால், வாக்குகளை பெறுவது சிரமம் என்ற தகவலை மேலே தெரியப்படுத்த, உடனே தொகுதியில் கடந்த 10ஆம் தேதியில் இருந்து தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் தொகுதியின் எல்லை முடிந்து, அடுத்த தொகுதியில் ஆரம்பிக்கும் பகுதியான வாசுதேவநல்லூர், தென்காசி போன்ற இடங்களிலும், ஏனைய பிற பகுதிகளிலும் 10 மணி நேர மின்தடை வழக்கம்போல நடைமுறையில் உள்ளது.