பெங்களூரூ: வரவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் சாதனை படைக்க புதிய தலைமுறை இளைஞர்களுக்கு வழி விடுவதாக பிரபல கிரிக்கெட் வீரர் டிராவிட் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார். பெங்களூரூவில் நிருபர்களிடம் கூறிய அவர் மேலும் பேசியதாவது:நான் ஓய்வு பெறுவது தமக்கு கவலை அளித்தாலும் பெருமையுடன் விலகுகிறேன். 16 ஆண்டுகளாக இந்தியாவிற்காக சிறப்பாக பணியாற்றியுளளேன். ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான தருணம். இந்தியாவுக்காக நான் ஆடிய நாட்கள் எனது வாழ்நாளில் மறக்க முடியாதது. எனது கிரிக்கெட் வரலாற்றில் இது வரை எனக்கு துணையாக இருந்த பெற்றோர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் , ரசிகர்கள் , மற்றும் பி.சி.சி.ஐ.,,க்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சச்சின் நான் எடுக்கும் பல முடிவுகளை ஆதரித்துள்ளார். சச்சின், கும்ளே ஆகியோருடன் ஆடியது எனது பெருமையாக கருதுகிறேன். எனது எதிர்கால வாழ்வு திட்டம் குறித்து வரும் ஜூனில் முடிவு செய்யவுள்ளேன் என்றார்.
தொடர்ந்து பேசிய பி.சி.சி.ஐ., சேர்மன் சீனிவாசன் டிராவிட்டின் பங்கு மகத்தானதாக இருந்தது. இவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
சச்சின்- வாட்சன் புகழ்ந்தனர்: டிராவிட் இந்தியாவின் ஒரு சிறந்த வீரர் என்றும் அவரது இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்றும் சச்சின் கூறியுள்ளார். இது போல ஆஸி., கேப்டன் வாட்சன் டிராவிட் மிக திறம்ப ஆடக்கூடியவர் என்றார்.
டிராவிட் டெஸ்ட் உலகில் 2 வது வீரர்: டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். இவர் மொத்தம் 13 ஆயிரத்து 288 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் உலகில் அதிக ரன் குவித்தவர் என்பதில் டிராவி்ட் 2 வது இடத்தில் உள்ளார். இவர் இந்தியாவின் தடுப்புச்சுவர் என வர்ணிக்கப்பட்டவர்.