சென்னையில் பூட்டிய காருக்குள் இருந்த 2 வயது சிறுவன் மூச்சுத் திணறி பலி

சென்னையில், பூட்டிய காருக்குள் இருந்த 2 வயது சிறுவன் மூச்சுத் திணறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் அஜாக்கிரதையால் அந்த சிறுவன் இறந்ததாக கூறப்படுகிறது.

சென்னை, பட்டாபிராம் கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் மாருதி(25). இவர் உணவு பொருள் வழங்கல் துறையில் லாரி டிரைவராக இருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று மதியம் 1.15 மணியளவில் தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த தனது காரில் 2 வயது மகன் இளமாறனுடன் ஏசியை போட்டுவிட்டு அமர்ந்திருந்தார். அப்போது, அவரது அலுவலகத்திலிருந்து போன் அழைப்பு வந்ததாக தெரிகிறது.

அவசரத்தில் தனது மகனை காரிலேயே வி்ட்டுவிட்டு அதே பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று 1 மணிநேரத்திற்கு பின்னரே காரில் தனது மகனை விட்டு விட்டு வந்தது அவரது நினைவுக்கு வந்ததுள்ளது. உடனே, அவசரமாக வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த காருக்குள் ஓடி வந்து திறந்து பார்த்தபோது அவரது மகன் மயக்கமடைந்து கிடந்தான். உடனே அருகிலிருந்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால், இளமாறன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதையும் கேட்காமல் மாருதி மகனின் உடலைத் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், சிறுவன் இறந்ததற்கான காரணம் உறுதியாக தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தையோ, தாயோ புகார் கொடுக்காததால், போலீசாரே வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். மேலும், சிறுவனின் மரணத்திற்கு தந்தையின் அஜாக்கிரதையே காரணம் என்று கூறி அவரை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


பெற்றோர்களே உஷார்:

காருக்குள் இருந்த சிறுவன் இறந்ததற்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால், காருக்குள் ஏசி ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்ததால் அதிலிருந்து வெளியான விஷ வாயு தாக்கி சிறுவன் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்த தகவலை சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்கள் மறுத்துள்ளனர். நிறுத்தியிருக்கும்போது காரின் ஏசியிலிருந்து விஷ வாயு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றும், காருக்குள் போதிய காற்று இல்லாததால் சிறுவன் இறந்திருக்கலாம் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எது எப்படியோ, தந்தையின் அஜாக்கிரதை பிஞ்சு மழலையின் உயிரை பறித்துவிட்டது. இனியாவது காருக்குள் குழந்தைகளை விட்டுவிட்டு ஷாப்பிங் செல்வது போன்றவற்றை தவிர்த்தால் இதுபோன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் நடக்காது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: