மிர்புர்: ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான லீக் போட்டி இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றால் மட்டுமே தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைக்காக கிரிக்கெட் தொடர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு லீக் போட்டியில் மோதும். அதன்பிறகு லீக் போட்டிகளில் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிப் பெறும்.
புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் ஒரு போனஸ் புள்ளியுடன் 9 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. தலா ஒரு வெற்றியை மட்டும் பெற்ற வங்கதேசம், இந்தியா அணிகள் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ள இலங்கை இன்னும் புள்ளி கணக்கை துவக்காமல் உள்ளது.
இந்த நிலையில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி நடைபெற உள்ளது. கிரிக்கெட் உலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இரு அணிகளும் மோதும் இன்றைய போட்டியில் இந்தியா கட்டாய வெற்றிப் பெற வேண்டிய நிலையில் உள்ளது.
இந்திய அணி:
இந்திய அணியை பொறுத்த வரை களமிறக்கப்படாமல் பார்வையாளராக காத்திருக்கும் மானோஜ் திவாரிக்கு இன்று வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்பிர், விராத் கோஹ்லி, சச்சின், ஆகியோர் பார்மில் உள்ளது இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது.
ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் சற்று முன்னேற்றம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தொடர்ந்து வாய்ப்புகளை வீணாக்கி வரும் ஜடேஜாவுக்கு இன்று வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. பேட்டிங்கில் இறுதிக்கட்டத்தில் வந்து அதிரடியாக ஆடும் கேப்டன் டோணியின் ஆட்டம் சிறப்பாக உள்ளது.
பந்துவீச்சில் கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய இளம்வீரர் அசோக் டின்டாவுக்கு பதிலாக இன்று வினய் குமார் களமிறக்கப்படலாம். இர்பான் பதானின் பந்துவீச்சு அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது. பிரவீண் குமார் பந்துவீச்சில் தனது அனுபவத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. சுழல் பந்துவீச்சுக்கு அஸ்வின் உடன் ரெய்னா, ஜடேஜா ஆகியோர் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
பாகிஸ்தான் அணி:
ஆசியக் கோப்பையில் அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்றுள்ள பாகிஸ்தான், இன்று இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மேலும் ஒரு வெற்றியை பதிவு செய்ய முயற்சி செய்யும். பேட்டிங்கில் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக், உமர் அக்மல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.
ஆனால் ஹபீஸ், ஜாம்ஷெட் ஆகியோர் அணிக்கு சிறந்த துவக்க அளிக்க வேண்டியுள்ளது. அனுபவ வீரர்கள் யூனிஸ் கான், அப்ரிதி ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து கோட்டை விடுவது இந்தியாவுக்கு சாதகம்.
பந்துவீச்சில் உமர் குல், அய்ஜாஸ் சீமா, முகமது ஹபீஸ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். சுழலுக்கு சயீத் அஜ்மல், அப்ரிதி ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.
கிரிக்கெட் உலகில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றால் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.