கூடங்குளத்தில் கேரள போலீஸாரும் குவிப்பு... 144 தடையும் பாய்ந்தது!

Kudankulam Power Plant கூடங்குளம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து அங்கு தற்போது கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் 144 தடை உத்தரவும் கூடங்குளம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசும் கூடுதல் மத்திய தொழிலக படையினரை அங்கு அனுப்பி வைக்கவுள்ளது. இந்த நிலையில் கூடங்குளம் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த போலீஸாரையும் குவித்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான முக்கிய முடிவை நேற்று தமிழக அமைச்சரவை எடுத்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக போலீஸார் ஆயிரக்கணக்கில் கூடங்குளம் பகுதிகளில் குவிக்கப்பட்டு விட்டனர். தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் தலைமையில் கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் முடிவுக்கு போராட்டக் குழுவினர் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மேலும், போராட்டங்களையும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கூடங்குளம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தற்போது போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில்,

கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டு உள்ளது. அரசின் ஆணையை தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்துக்கு உதவுவது, கூடங்குளம் பகுதி மக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது போன்ற செயல்கள் தடுக்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சட்டப்படி வேலை செய்து வருகிறவர்களை தடுக்காமல் இருக்கவும், அவர்களை பாதுகாக்கும் பொருட்டும், பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டும், கலவரங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும், பொது அமைதியை பாதுகாக்கவும் இந்த தடை ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவுக்கு உதவி செய்வது, அவர்களை தூண்டி விடுவது போன்றவற்றில் ஈடுபடும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் நபர்கள் 19.3.2012 (அதாவது நேற்று) மாலை 3 மணி முதல், 2.4.2012 மாலை 3 மணி வரை ராதாபுரம் வட்ட எல்லைக்குள் நுழைய தடை விதித்து இந்த 144 தடை ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

கேரள போலீஸார் குவிப்பு

இந்த நிலையில் தமிழகம் முழுவதிலுமிருந்து வரவழைக்கப்பட்டுள்ள போலீஸார் தவிர கேரளாவிலிருந்தும் கணிசமான அளவில் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இது கூடங்குளம் பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக போலீஸார் எத்தனை பேரை வேண்டுமானாலும் வரவழைக்கட்டும். ஆனால் கேரளா போலீஸாரை ஏன் வரவழைத்துள்ளது அரசு. இது தேவையில்லாத பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திடவே உதவும் என்று அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஏற்கனவே அணு மின் நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

மொத்தத்தில் புயலுக்கு முந்தைய மயான அமைதியுடன், அதேசமயம், கடும் பரபரப்புடன் கூடங்குளம் மற்றும் சுற்றுப்பகுதிகள் காணப்படுகின்றன.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: