சங்கரன்கோயில் இடைத் தேர்தல் - மக்கள் ஓட்டு காசுக்கா, ஆட்சிக்கா?

Jayalalitha, Vaiko ,Karunanidhi and Vijayakanth சென்னை: தமிழகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சங்கரன்கோயில் இடைத் தேர்தல் நாளை நடக்கிறது.

பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 1 ஆண்டை நெருங்கும் அதிமுக ஆட்சி, பல்வேறு துறைகளிலும் சறுக்கல்களைச் சந்தித்துள்ளது. மின்வெட்டுப் பிரச்சினையில் மக்களை கிட்டத்தட்ட நரகத்தில் தள்ளிவிட்டது. சிறு, குறு தொழில்கள் முற்றாக ஸ்தம்பித்துவிட்டன. எனவே ஆட்சி குறித்த மக்களின் மதிப்பீடுதான் இந்தத் தேர்தல் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் நடப்பதைப் பார்த்தால் மக்களை அப்படியெல்லாம் 'தப்பாக' எடைபோட்டுவிடக் கூடாது என்றே தோன்றுகிறது.

அதிமுகவின் ஆட்சி நன்றாக உள்ளதா இல்லையா என்பதல்ல சங்கரன்கோயில் பெரும்பான்மை வாக்காளர்களின் பிரச்சினை. எந்தக் கட்சி எவ்வளவு காசு கொடுக்கும் என்பதே முக்கியம் என வெளிப்படையாகவே பல வாக்காளர்கள் கருத்துக் கூறி, அதிர வைத்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் தனது சகல பலத்தையும் அசுரத்தனமாக பிரயோகித்து களமிறங்கியுள்ளது ஆளும்கட்சியான அதிமுக. 32 அமைச்சர்கள் தொகுதியின் அத்தனை தெருக்களிலும் சுற்றிச் சுற்றி வந்து வாக்கு வேட்டை ஆடிவிட்டனர். போதாததற்கு முதல்வர் ஜெயலலிதாவும் சூறாவளிப் பிரச்சாரம் செய்துள்ளார்.

பிரச்சாரம் முடிந்துவிட்ட பிறகும், இரவுகளில் ரகசியமாக சென்று தங்கள் 'வாக்கு சேகரிப்பு உத்தி'யை பிரயோகித்து வருகிறார்கள். .

தொகுதி முழுக்க பண விநியோகம் மிகத் தாராளமாக நடப்பதாக பல கட்சிகளும் புகார் கூறிவிட்டன. தேர்தல் ஆணையமோ, 'பணமா... இந்தத் தொகுதியிலா' என்ற ரீதியில் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறது.

கலிங்கப்பட்டியில் வைகோவின் தெருவிலேயே ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் பண விநியோகம் செய்து பிடிபட்டு தர்ம அடி வாங்கியிருக்கிறார்கள் அதிமுக பிரமுகர்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்களைப் பிடித்த 'குற்றத்துக்காக' வைகோவிடம் விசாரணை நடத்தி, அடித்தவர்களை கைது செய்ய மல்லுக்கட்டி நின்றது போலீஸ். வைகோவின் கர்ஜித்ததையும், அவருக்கிருந்த மக்களின் ஆதரவையும் பார்த்து பேசாமல் திரும்பியுள்ளனர் போலீசார்.

ஆனால் கலிங்கப்பட்டியில் மட்டும்தான் இந்த நேர்மையைக் காண முடிந்தது. மற்ற பகுதிகளில் எங்க ஊருக்கு எப்போ வரும் 'காசு வண்டி'? என்ற கேள்வியோடு காத்திருந்து, இப்போது பாக்கெட் நிறைந்த சந்தோஷத்துடன் உள்ளனர் வாக்காளப் பெருமக்கள்!

குறிப்பாக சங்கரன்கோயிலில் அதிமுக வேட்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 'காசுகொடுத்தாதான் ஓட்டுப் போடுவோம்' என நூற்றுக்கணக்கான பெண்கள் கூறியது உண்மையிலேயே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

கிட்டத்தட்ட தொகுதி முழுக்கவே, பணம் பாய்ந்துவிட்டது எனவே தேர்தலை நிறுத்துங்கள் என்ற வைகோவின் கூப்பாட்டைக் கண்டுகொள்ளத்தான் ஆளில்லை.

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் சவாலாக நிற்பது மதிமுக. வைகோ என்ற தனி மனிதர் அந்த அளவு உயர்ந்து நிற்கிறார், தனது ஓய்வற்ற நேர்மையான தேர்தல் பணிகளால்.

வேட்பாளர் சதன் திருமலைக்குமார் மற்றும் பிரச்சார குழுவுக்கு வைகோவின் உத்தரவே, "யாருக்கும் பணம் கொடுக்காதே. பணம் கொடுத்து வாங்கும் ஓட்டு நமக்கு வேண்டாம். யார் பணம் கொடுத்தாலும் அதைத் தடுப்போம். இதை மக்கள் விரும்பாவிட்டாலும் நமக்குக் கவலையில்லை ('இந்தாளுக்குப் பிழைக்கத் தெரியலய்யா!' - பப்ளிக் கமெண்ட் இது)" என்பதுதான்.

இதுகுறித்துக் கேட்டபோது, "என்னைப் பற்றி என்ன சொன்னாலும் கவலையில்லை. இந்த கேலிப் பேச்சுக்களுக்காக என் நேர்மையை நான் கைவிட முடியாது. இவர்கள் ஒரு நாள் என்னையும் இந்த இயக்கத்தையும் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்கிறார் வைகோ.

மதிமுக வேட்பாளருக்காக, எழுத்தாளர்கள், படித்த இளைஞர் கூட்டம், தமிழ் உணர்வாளர்கள் சங்கரன்கோயிலைச் சுற்றிச் சுற்றி பிரச்சாரம் செய்தனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்துடன் வைகோவுக்காக களமிறங்கியது புதிய காட்சி.

திமுக சார்பில் ஜவஹர் சூர்யகுமார் போட்டியிடுகிறார். திமுகவின் கவுரவப் பிரச்சினையாகிவிட்டது இந்தத் தேர்தல். காரணம் இதில் வைகோவின் மதிமுக தங்களை எந்த வகையிலாவது முந்திவிட்டால் என்னாவது என்ற கேள்விதான், அழகிரி, ஸ்டாலின் இருவரையும் கைகோர்த்து வேலை பார்க்க வைத்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும் தன் பங்குக்கு பிரச்சாரம் செய்துவிட்டார்.

சங்கரன்கோயிலை ஜெயிப்பதைவிட, மதிமுகவை ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புதான் திமுகவிடம் மேலோங்கியுள்ளது.

திராணியை நிரூபிக்க வேண்டிய விஜயகாந்தின் தேமுதிக இந்தத் தொகுதியில் சொல்லிக் கொள்ளும் அளவு வாக்குகள் பெறுமா என்ற கேள்வி விஜயகாந்துக்கே இருக்கிறது. அதனால்தான் அவர் பிரச்சாரம் தொடங்கிய நாளிலிருந்து தோல்வி பற்றி எனக்கு பயமில்லை, கவலையில்லை என்று கூறிவருகிறார்.

நாளைய பரீட்சை கட்சிகளுக்கு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை, இந்த பரீட்சை வாக்காளர்களுக்கு!
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: