சென்னை: லாட்டரி சீட்டு வழக்கில் கைதான மார்ட்டினின் நண்பர்கள் நாகராஜன் மற்றும் மூர்த்தி ஆகியோர் வீடுகளில் இருந்து ரூ. 7.70 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.லாட்டரி சீட்டுகளை பதுக்கி விற்பனை செய்தது, மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி கோவை சிறையில் உள்ளார் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின். அவரது நண்பர் தொழில் அதிபர் நாகராஜன். சென்னை ஆதம்பாக்கம் தில்லை சங்கர்நகர் 25வது தெருவில் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டின் கீழ்தளத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைததுள்ளார்.
இந்நிலையில் நாகராஜனின் வீட்டில் சட்டவிரோத பொருட்களும், லாட்டரி சீட்டுகளும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 2 மணிக்கு நாகராஜனின் கடையில் சோதனை நடத்தியபோது ரூ.7 கோடி பணம் கட்டுகட்டாக சிக்கியது. அதை போலீசார் பறிமுதல் செய்து நாகராஜனை விசாரித்தபோது அவர் ஒழுங்காக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் கூறியதாவது, கடந்த 1981ம் ஆண்டு முதல் பல்வேறு லாட்டரி நிறுவனங்களில் பணி புரிந்தேன். தற்போதும் லாட்டரி தொழில் செய்து வருகிறேன். லாட்டரி சீட்டுகளை ஹைதராபாத் மற்றும் டெல்லியில் இருந்து சிக்கிம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பேன். அவ்வாறு அனுப்பும்போது ஒரு சில கட்டுகள் இங்கு வரும். அவற்றை தமிழகத்தில் உள்ள நபர்களுக்கு வினியோகம் செய்வேன். 1984ல் இருந்து என்னுடன் வேலை பார்த்த கும்பகோணத்தைச் சேர்ந்த மூர்த்திக்கும் இந்த தொழி்லில் பங்குண்டு. இந்த பணத்தில் லாட்டரி தொழிலில் கிடைத்த ரூ. 2 கோடியும் அடக்கம். மூர்த்தி தான் சம்பாதித்த பணத்தை என்னிடம் கொடுத்து வைத்துள்ளார் என்றார்.
இதையடுத்து போலீசார் அண்ணா நகரில் உள்ள மூர்த்தி வீட்டுக்கு சென்று சோதனை நடத்தி ரூ.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
நாகராஜன் மற்றும் மூர்த்தி வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.7.50 கோடியில் மார்ட்டினுக்கு பெரும் பங்கு உண்டு என்று போலீசார் கருதுகின்றனர். கோவை சிறையில் உள்ள மார்ட்டினை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே மூர்த்தி தலைமறைவாகிவிட்டார். மூர்த்தி சிக்கினால் இந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.