டெல்லி: ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்தக் கட்சியைச் சேர்ந்தவரான ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது.கட்டண உயர்வு குறித்து கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் மூத்த எம்பியான சுதீப் பந்தோபாத்யாயா, பயணிகள் கட்டண உயர்வை திரும்பப் பெற தினேஷ் திரிவேதியை வலியுறுத்தியுள்ளோம். ஏழைகளின் நலனை எப்போதுமே பேணிக் காக்க வேண்டும் என்று தான் மம்தா எங்களுக்குக் கற்றுத் தந்துள்ள பாடம். அதை மீற முடியாது. பட்ஜெட் குறித்து திரிவேதியுடன் எங்களது கட்சியில் யாரும் ஆலோசிக்கவில்லை. இதனால் கட்டண உயர்வு அதிர்ச்சி தருகிறது என்றார்.
கட்சியின் இன்னொரு மூத்த எம்பியான டெரிக் ஓ பிரையன் தனது டிவிட்டரில், பட்ஜெட் என்றாலே விலையை உயர்த்துவது என்று தான் பொருளா.. இதை ஏற்கவே முடியாது என்று கூறியுள்ளார்.
இது குறித்து தினேஷ் திரிவேதி கூறுகையில், கட்டண உயர்த்தப்படுவது குறித்து எனது கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்குத் தெரியாது. இந்த பட்ஜெட்டுக்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன் என்றார்.
இந் நிலையில் உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப் பெற வேண்டும் என திரிவேதிக்கு மம்தா உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது
இல்லாவிட்டால் அவரை பதவி விலகுமாறு கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து அவர் விரைவில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்வரானதையடுத்து திரிவேதியை ரயில்வே அமைச்சராக்கினார். இது தான் திரிவேதி தாக்கல் செய்த முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே அவரது கடைசி பட்ஜெட்டாகவும் மாறப் போகிறது.