[மார்ச் 9 அன்று சென்னைப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை]
மார்ச் 9, 2012
சென்னை
இனம் மற்றும் மொழி அடிப்படையில் தொழிலாளிகள், மாணவர்கள், வாடகைக் குடியிருப்புகளில் இருப்போர் ஆகியோரைப் பதிவு செய்து பட்டியல் தயாரிக்கும் தமிழகக் காவல்துறையின் திட்டத்தைத் தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் இது குறித்துக் கரிசனமுள்ள குடிமக்கள் கண்டித்தனர். “இனவாதத் தன்மை”யுடையது (racialist), வர்க்க நோக்கில் மக்களைப் பிரித்தொதுக்குவது (classist) என இத்திட்டத்தைக் கண்டித்துள்ள இவர்கள், நாடெங்கிலும் சென்று வருவதற்கான குடிமக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் இந் நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பதையும் சுட்டிக் காட்டினர். நகரங்களின் அமைதிச் சூழலை இந் நடவடிக்கை பாதித்துள்ளது எனவும், ஒவ்வொரு வட இந்தியத் தொழிலாளியையும், மாணவனையும் சந்தேகக் கண் கொண்டு நோக்கும் உள நிலை மக்கள் மத்தியில் உருவாவதற்கு இது காரணமாகியுள்ளது எனவும் இவர்கள் கூறினர். மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர்மீது பள்ளிகரணையில் ஒரு கும்பல் மேர்கொண்ட வன்முறைக்கும், பொள்ளாச்சியில் 19 வயது பீஹார் மாநில இளைஞன் ஒருவன் அடித்துக் கொல்லப்பட்டதற்கும் காவல்துறை இவ்வாறு உருவாக்கியுள்ள சந்தேகச் சூழலையே காரணமாகச் சொன்ன இவர்கள், இத்தகைய இனவாரிக் கணக்கெடுப்பைத் (racial profiling)தொடர்வதென்பது காவல்துறையால் கட்டுப்படுத்த இயலாத ஒரு வன்முறைச் சூழலுக்கு இட்டுச் செல்லும் என எச்சரித்தனர்.
இவ்வாறு வெளியார்களை இலக்காக்கித் தாக்குவது என்பது ‘மஹாராஷ்டிர நவ நிர்மாண் சேனா’ போன்ற மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் லாபம் சேர்க்கும் இன வெறி அமைப்புகளின் பண்பு. அது இப்படித்தான் பீஹாரிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் பிழைக்க வந்த ஏழை எளியத் தொழிலாளிகள் மீது வன்முறையை ஏவியது. இத்தகைய வன்முறைகளும், இவற்றால் உருவாகும் துணை விளைவுகளும் மாநிலப் பொருளாதாரத்தையே பாதிப்பதோடு, முதலீட்டு வரத்தைக் குறைத்துத் மாநிலத் தொழில் வளர்ச்சியையே பாதிக்கும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
1979ம் ஆண்டின் “மாநிலங்களுக்கிடையே புலம் பெயரும் தொழிலாளிகள் சட்டத்தின் (Inter-state Migrant Worker’s Act, 1979)”படி இவர்களைப் பதிவு செய்வதற்கு மறுப்பேதுமில்லை எனத் தெரிவித்த இவர்கள் ஆனால் இதை அரசின் தொழிலாளர் துறைதான் செய்யவேண்டுமே ஒழிய காவல்துறை செய்யக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டினர். தமிழ்நாட்டில் பணியாற்றுகிற சுமார் 10 இலட்சம் புலம் பெயர் தொழிலாளிகளில் (Migrant Workers) பெரும்பாலோர் மேற்படி சட்டம் இவர்களுக்கு உறுதியளித்துள்ள பாதுகாப்புகள் எதுவுமின்றியே பணிசெய்கின்றனர். அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்சக் கூலி அளிக்கப்பட வேண்டும் என ஒரு சட்ட விதி இருந்தும் இப் புலம் பெயர் தொழிலாளிகள் சற்றும் மனிதாபிமானமற்ற சூழலில் அதிக நேரம் வேலை செய்யக் கட்டாயப் படுத்தப் படுகின்றனர். புலம்பெயர் குழந்தைத் தொழிலாளிகளுக்கும் இதே கதிதான். தங்களின் சொந்தக் கிராமங்களிலிருந்து தமிழக இடைத்தரகர்களால் கொண்டு வரப்படும் இவர்கள் கொத்தடிமைகளாகவே (bonded labours) நடத்தப்படுகின்றனர். சற்றும் சுகாதாரமில்லாத சிறு தகரக் கொட்டகைகளில் குடியமர்த்தப் படுகின்றனர். தொழில் செய்யும்போது விபத்து ஏற்பட்டு மரணமடைந்தாலோ, உறுப்புக்களை இழந்தாலோ, இவர்களுக்கு எவ்விதமான சட்டப் பாதுகாப்புகளும் கிடையாது. தற்போது சென்னை மெட்ரோ ரயில்பாதை உருவாக்கத்தில் பணிபுரியும் புலம் பெயர் தொழிலாளிகளும் எவ்விதச் சட்டப் பாதுகாப்பும் இல்லாமல்தான் வேலை செய்கின்றனர். பணியை மேற்கொள்ளும் அரசு நிறுவனங்களும் ஒப்பந்தக்காரர்களும் புலம் பெயர் தொழிலளிகளுக்கான சட்ட விதிகள் எதையும் பின்பற்றுவதில்லை. கொத்தடிமைகளாக வைத்திருத்தல், தொழிற்தளப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமையால் விளையும் விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் முதலியன காவல்துறையால் முறையாகப் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்கப் படுவதில்லை எனவும் இவர்கள் குற்றம் சாட்டினர்.
வட இந்திய மாணவர்களைப் பிரித்து நிறுத்துவது மாணவர்களின் நெஞ்சில் உயர் மதிப்பீடுகளை உருவாக்கத்தக்க கல்விச் சூழலில் பெரும் பாதிப்புகளை ஏர்படுத்துகிறது. எல்லா மாணவர்களுக்கும் அவரவர் கல்வி நிறுவனங்கள் அடையாள அட்டைகளை வழங்கியுள்ள நிலையில் இவ்வாறு வட இந்திய மாணவர்களைத் தனியே பதிவு செய்வது காவல்துறையிடம் மறைந்துள்ள இனவாதச் சிந்தனையையே வெளிப்படுத்துகிறது.
காவல்துறை மேற்கொண்டுள்ள இத்தகைய இனவாரிக் கணக்கெடுப்பை உடனே நிறுத்த வேண்டுமெனக் கோரிய இக் குடிமக்கள் பிரதிநிதிகள், புலம் பெயர் தொழிலாளிகள் சட்டத்தின் பாதுகாப்பு இத் தொழிலாளிகளுக்குக் கிடைக்கும் வகையில் உடனடியாக இவர்களின் கணக்கெடுப்பை அரசு தொழிலாளர் துறை மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்தினர்.
பங்கு பெற்றோர்: அ.மார்க்ஸ், அ.சவுந்தரராசன், ச.ம.உ,CITU, வழக்குரைஞர் கீதாராமசேஷன், கீதா ராமகிருஷ்ணன், குமார், SFI
மேலும் தகவல்களுக்கு:
கீதா ராமகிருஷ்ணன் ,அமைப்புசாராத் தொழிலாளிகளின் கூட்டமைப்பு (94440 50071)
மதுமிதா தத்தா, நீதி மற்றும் அமைதிக்கான குழு, தமிழ்நாடு (94443 90240)