சென்னை: ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தின் கோரிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே, அதனால் எந்த பலனும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியால் 2012-2013-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மிகப்பெரிய நிறுவனமான இந்தியன் ரயில்வே சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுபோல இந்த பட்ஜெட் அமையவில்லை.
இந்த நிலையில் பொதுமக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் ரயில் பயணிகள் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. கிலோ மீட்டருக்கு 2 பைசா முதல் 30 பைசா வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்ட அளவுக்கு பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று கட்டண உயர்வை நியாயப்படுத்துவது சரியல்ல.
கட்டண விகிதத்தை பொறுத்தளவில் சில்லரைத் தொகையை முழு தொகையாக வசூலிக்கும் நோக்கத்துடன் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. பிளாட்பாரம் டிக்கெட் கூட 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டை பார்க்கும்போது எதிர்காலத்திலும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டிலும் கட்டண உயர்வுகள் இருக்கும் என்பதற்கான அறிகுறியாகவே தெரிகிறது. அரசு-தனியார் பங்களிப்புடன் ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை நவீனப்படுத்துவது குறித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. எனவே, இந்த ஆண்டிலாவது அந்த திட்டம் நிறைவேற்றப்படுமா என்பதும் சந்தேகமாகத்தான் இருக்கிறது.
அதுபோல ஆளில்லாத லெவல் கிராசிங்கில் ரயில்வே மேம்பாலம், சுரங்கபாலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் குறைவான நிதியையே ரயில்வே அமைச்சகம் ஒதுக்குகிறது.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்றால் சரக்கு போக்குவரத்து சீர்படுத்தப்பட வேண்டியது மிக முக்கியமாகும். எனவே, புதிய ரயில் பாதைகளும், புதிய ரயில்களும் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
தமிழகத்திற்குள்ளும் வேறு மாநிலங்களிலும் சேருமிடமாக கொண்ட 16 புதிய வழித்தடங்கள் தமிழகத்திற்கு தேவைப்படும் நிலையில், 10 புதிய ரயில்களை மட்டும் தருவதாக கூறியிருப்பது தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யாது. அந்த வகையில் தமிழகத்தின் குறிப்பிட்ட வழித்தடங்களில் புதிய ரயில்கள் விட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்-காட்பாடி இடையே உள்ள ரயில் பாதையை மின்மயமாக்கும் கோரிக்கைக்கும் செவி சாய்க்கவில்லை. சென்னைக்கு வெறும் 18 கூடுதல் புறநகர் ரயில் சேவைகள் மட்டும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஆவடியுடன் ஒரகடம் ரயில் இணைப்பு பற்றி தமிழகம் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்களின் பட்டியலில் ஒரகடம் திட்டம் இடம்பெறவில்லை. அதுபோல நீண்டகால கோரிக்கையான விழுப்புரம்-திருச்சி இரட்டைப் பாதை திட்டம் பற்றியும் பட்ஜெட்டில் கூறப்படவில்லை.
சென்னையில் இருந்து தென்பிராந்தியத்திற்கு பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த ரயில்வே பட்ஜெட் சாதாரண மக்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. மிகப்பெரிய நோக்கங்கள் பற்றி பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தாலும், அவற்றை அமல்படுத்துவதற்கான தெளிவான திட்டங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ரயில்வே பட்ஜெட் குறித்து தலைவர்களின் கருத்து:
டாக்டர் ராமதாஸ்: ரயில்வே பட்ஜெட்டில் சாதாரண மக்கள் பயணிக்கும் படுக்கை வசதி கொண்ட 2ம் வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 5 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும். 75 எக்ஸ்பிரஸ் ரயில்களில் தமிழகத்திற்கு 10 ரயில்கள் கிடைத்தும் பலனில்லை.
விஜயகாந்த்: ரயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்று பத்திரிக்கைகளும், ஊடகங்களும் கணித்தன. ஆனால் அதற்கு நேர்மாறாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீர்குலைக்கும்.
வைகோ: ரயில்வே பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமி்ழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசு ரயில்வே பட்ஜெட்டில் மொத்தமாக புறக்கணித்துவிட்டது. சென்னை ராயபுரத்தில் மூன்றாவது முனையம் அமைக்க ஆய்வு செய்யப்படும் என்று மட்டும் தான் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாற்று திறனாளிகள் நலம் பேணும் வகையில் புதிய ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. ஏதிர்பார்த்த அளவிற்கு தமிழகத்திற்கு புதிய திட்டங்கள், ரயில்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தையே அளிக்கின்றது என்று அதில் தெரிவித்துள்ளார்.
ரயில்வே பட்ஜெட் குறித்து அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ரயில்வே பட்ஜெட்டில் தென் மாவட்டங்களுக்கு இரட்டை வழிப்பாதை அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு அது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.