சென்னை : சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, துணை ராணுவத்தினர் ஞாயிறுக்கிழமை வர உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் இந்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர் ஒவ்வொருவரும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மத்திய, மாநில அமைச்சர்களின் பிரசாரத்தை கண்காணிக்க தேர்தல் ஆணையம் 35 கண்காணிப்புக் குழுக்களை நியமித்துள்ளது.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு துணை தாசில்தார், ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர், ஒரு வீடியோகிராபர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள், விஐபிக்களை பின் தொடர்ந்து சென்று அவர்களின் பிரசாரத்தை கண்காணிப்பார்கள்.
துணை ராணுவப்படை
வாக்குப் பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் ஞாயிறுக்கிழமை வர உள்ளனர்.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு அமைச்சரும் தனித்தனியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் வங்கிகளில் அதிக அளவில் பணம் எடுப்பவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.முதல் கட்டமாக வாக்குச் சாவடி மையங்களுக்கான பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ படையினர், மார்ச் 11ம் தேதி சங்கரன்கோவில் வர உள்ளனர்.
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வளவு துணை ராணுவ படையினர் பயன்படுத்தப்பட்டனரோ, அந்த அளவுக்கு இங்கும் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்காளர்களுக்கு பணமோ, அன்பளிப்போ அளித்தால் தேர்தல் நடவடிக்கை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
திருச்சி இடைத்தேர்தலில் 5 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொரு கம்பெனியிலும் 80 பேர் என 400 துணை ராணுவ படை வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அதேபோல் இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியிலும் 400 வீரர்கள் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.