ராமஜெயம் உடல் இன்று தகனம்- திருச்சியில் ஒரு பஸ்ஸும் ஓடவில்லை- ஆயுத போலீஸ் குவிப்பு!

Ramajayam. திருச்சி முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளதைத் தொடர்ந்து திருச்சி முழுவதும் பதட்டம் நீடிக்கிறது. பஸ்கள் எதுவும் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும் அசாதாரண நிலை நிலவுவதால், ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், நேற்று காலை சிலரால் வேனில் கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்டார். கை, கால்கள் கட்டிய நிலையில் அவரது உடலை போலீஸார் கல்லணை அருகே மீட்டனர்.

இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் ஆங்காங்கு வன்முறையில் குதித்தனர். இருப்பினும் அவர்களைப் போலீஸார் தடியடி நடத்தியோ, வேறு விதமாகவோ கலைக்க முயற்சிக்கவில்லை.

இந்த நிலையில் ராமஜெயத்தின் உடல் இன்று முற்பகலில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓயாமரி சுடுகாட்டில் தகனம் செய்யப்படவுள்ளது. இதனால் திருச்சி முழுவதும் அசாதாரண நிலை நிலவுகிறது.

மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, தென்னூர், தில்லைநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பஸ்கள் ஓடவில்லை, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் பெரும் பதட்டமான நிலை காணப்படுகிறது. ஆட்டோக்கள் கூட ஓடவி்ல்லை. தாக்கப்படலாம் என்ற பயத்தில் ஆட்டோக்காரர்கள் ஆட்டோக்களை எடுக்கவே இல்லை.

திமுகவினர் கடும் கொந்தளிப்பில் இருப்பதால், நகர் முழுவதும் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரை பாதுகாப்புக்கு இறக்கியுள்ளனர்.

தி்ருச்சி முழுவதும் தனியார் பள்ளிகள் பல இன்றும் மூடப்பட்டுள்ளன. வர்த்தக வளாகங்கள் பலவும் கூட மூடப்பட்டுள்ளன.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: