டமாஸ்கஸ்: சிரியாவில் 26 பெண்கள் மற்றும் 21 குழந்தைகள் கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு சிரிய பாதுகாப்பு படையினர் தான் காரணம் என்று எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 11 மாதங்களாக நடந்து வரும் போராட்டங்களுக்கு 8,500 பேர் பலியாகியுள்ளனர். இந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர அரபு நாடுகளின் கூட்டமைப்பு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் அரபு நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. தூதர் கோஃபி அன்னன் ஆகியோர் டமாஸ்கஸ் சென்று அரசு மற்றும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையே கடும் போராட்டம் நடந்து வரும் ஹோம்ஸ் நகரில் 26 பெண்கள், 21 குழந்தைகள் என மொத்தம் 47 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் கழுத்து அறுக்கப்பட்டும், பலர் கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் பிணங்கள் ஆங்காங்கே கிடந்தன. அவர்களை தீவிரவாதிகள் கொன்றுவிட்டதாக அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் ராணுவத்தினர் கொன்றதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே 47 பேரையும் பாதுகாப்பு படையினர் தான் கொன்றார்கள் என்று எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் கொல்லப்பட்ட பெண்களில் பலர் கற்பழித்து கொல்லப்பட்டதாகவும் அது குற்றம்சாட்டியுள்ளது.