கொல்கத்தா: மாவோயிஸ்ட் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான சுசித்ரா மகாதோ மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி முன்னிலையில் தமது கணவருடன் சரணடைந்தார்.தாம் சரணடைந்தது தொடர்பாக சுசித்ரா கூறியதாவது:
மாவோயிஸ்டு அமைப்பிலிருந்து விலகி இயல்பு வாழ்க்கை வாழ விரும்பினோம். அதனால் சரணடைந்து இருக்கிறோம். நாங்கள் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை
ஆயுதங்களைக் களையுமாறு முதலமைச்சர் மமதா விடுத்த வேண்டுகோளை ஏற்று இம்முடிவை மேற்கொண்டோம் என்றார் அவர்.
சுசித்ராவுக்கும் அவரது கணவரான பிரபிர் கராய்க்கும் கடந்த பிப்ரவரி 25-ந் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் மிட்னாப்பூர் மாவட்டம் லால்கர் காவல்நிலைய சரகத்துக்குட்பட்ட டன்சோலா கிராமத்தில் வாழ்ந்து வந்தனர்.
சுசித்ராவின் முன்னாள் கணவர் சசதார் மகாதோ கடந்த இடதுமுன்னணி ஆட்சியின் போது போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 24- தேதி மேற்கு மிட்னாப்பூரில் மாவோயிஸ்ட் மூத்த தலைவர் கிஷன்ஜியை போலீசார் சுட்டுக்கொன்ற மோதலின் போது சுசித்ரா படுகாயமடைந்த நிலையில் தப்பியிருந்தார்.