கோலிவுட் முதல் பாலிவுட் வரை கொலையை கற்றுக் கொடுக்கும் கொடூர சினிமா படங்கள் !


அக்னிபத் இந்திப் படத்தை பார்த்து, ஆசிரியை உமா மகேஸ்வரியை கொலை செய்ய கற்றுக்கொண்டேன். தமிழகத்தையே உலுக்கி எடுத்த ஆசிரியை கொலை வழக்கில் கைதான 9-ம் வகுப்பு மாணவன் அளித்த வாக்குமூலம் இது. பருத்தி வீரன் சினிமாவில் பெண் சாராய வியாபாரியின் முகத்தை சாக்கு பையில் மூடி கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சியை பார்த்தோம். அதைப் போலவே மகளிர் குழு தலைவியை துடிக்க துடிக்க கொன்றோம். மாங்காட்டில் கடந்த மாதம் நடந்த சுய உதவி குழு பெண் அம்பிகா கொலையில் கைதான கொலையாளிகள் இப்படி வாக்குமூலம் அளித்தனர்.
 
அந்த படத்தை பார்த்து கொலை செய்தோம். இந்த படத்தை பார்த்து கொலைக்கு சதி திட்டம் தீட்டினோம். என கொலை வழக்குகளில் கைதாகும் வாலிபர்கள் அளிக்கும் வாக்குமூலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஒரு காலத்தில் துளியும் வன்முறையின்றியே சினிமா படங்கள் எடுக்கப்பட்டன. அந்த படங்களில் கருத்துள்ள பாடல்களும் இடம் பெற்றிருக்கும். குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்களில் இடம்பெறும் பாடல்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வகையிலேயே எழுதப்பட்டிருக்கும்.
 
சின்ன பயலே... சின்ன பயலே... சேதி கேளடா? என்பது போன்ற ஏராளமான பாடல்களை அதற்கு உதாரணமாக கூறலாம். ஆனால் இன்று... வெளிவரும் சினிமா படங்களில் வன்முறை மற்றும் பாலியல் உணர்வை தூண்டும் காட்சிகளே நிரம் பிக்கிடக்கின்றன. சினிமா மூலமாக சொல்லப்படும் கருத்துக்கள் எளிதாக மக்களை சென்றடைந்து விடுவதால், இதுபோன்ற காட்சிகளே பார்க்கும் குழந்தைகளின் மனதில் அது ஆழமாக பதிந்து விடுகிறது. அதுவே அவர்களை தவறான பாதைக்கும் இழுத்துச் செல்கிறது என்றால் அது மிகையாகாது.
 
இதே போல் தொலைக்காட்சி தொடர்களிலும் கொலை- கடத்தல் போன்ற காட்சிகளே அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இதுபோன்று வன்முறையை தூண்டும் காட்சிகளுக்கு ஒட்டு மொத்தமாக தடைவிதிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை சினிமாக்களில் காட்டப்படும் வன்முறை காட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே இளைய சமுதாயத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். 

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: