
பிரம்மாண்டம் என்பதை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்திய இந்தி(ய)ப் படம் ‘ஷோலே’. அதில் முக்கிய கதாபாத்திரமாக படம் முழுக்க வந்துகொண்டே இருப்பார் தர்மேந்திரா. ஆனாலும், அவருடைய நண்பராக நடித்த அமிதாப்பச்சன்தான் கடைசி காட்சியின் மூலம் ரசிகர்களின் மனங்களை வென்றார். அதன் காரணமாக, இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக நின்றார். எதற்காக 35 ஆண்டுகளுக்கு முன் வெளியான அந்த பழைய இந்திப் படத்தை இப்போது நினைவுபடுத்தவேண்டும் என கேட்கத் தோன்றும்.
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் பழைய ஷோலே படத்தின் கதாபாத்திரங்களைத்தான் நினைவுபடுத்துகிறது. அங்கே முதல்முறையாக ஐந்தாண்டு காலம் முழுமையாக ஆட்சி செய்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரசை வீழ்த்தி, முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 224 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் திகழ்கிறது.
தேர்தல் பிரச்சாரக் களத்தில் அதிகம்ன விளம்பரப்படுத்தப்பட்டவர் காங்கிரஸ் பொதுச்செயலாளரான ராகுல்காந்தி. 48 நாட்கள் உ.பியிலேயே முகாமிட்டு 211 பொதுக்கூட்டங்களில் பேசினார். அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி, அவரது கணவர் வதேரா, அவர்களுடைய குழந்தைகள் என நேரு குடும்பத்தின் இந்தத் தலைமுறை மொத்தமும் களமிறங்கிப் பிரச்சாரம் செய்தது. காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடிகிறதோ இல்லையோ, அதன் தயவால்தான் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியும் என்கிற அளவுக்கு ராகுல்காந்தியின் பிரச்சாரம் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, முலாயம்சிங் கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் காங்கிரசின் தயவில்லாமல் முடியாது என்றெல்லாம் ஆரூடங்கள் வெளியாயின. ஆனால், தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி வெறும் 28 இடங்களுடன் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இங்கேதான் ‘ஷோலே‘ பட உதாரணம் தேவைப்படுகிறது.
தர்மேந்திரா போல ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரக்களம் முழுவதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டார். ஆனால், அமிதாப்பச்சன் போல மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர் 38 வயதான அகிலேஷ்சிங் யாதவ். இவர் முலாயம்சிங் யாதவ்வின் மகன். சமாஜ்வாடி கட்சியின் உ.பி. மாநிலத் தலைவர். இவர்தான் இந்த வெற்றியின் சூத்திரதாரி. அத்துடன் இவர், அமிதாப்பச்சனின் தீவிர ரசிகர் என்பது கூடுதல் பொருத்தம்.
தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருவதும், தேர்தல்களத்தில் திடீர் புகழைப் பெறுவதும் தமிழக மக்கள் உள்பட இந்தியாவின் பல மாநிலவாசிகளுக்கும் புதிதல்ல. ஆனால், 2014ல் இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ‘அரை இறுதி ஆட்டம்’ என வர்ணிக்கப்பட்ட உ.பி மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளான காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் ‘தண்ணி’ காட்டியிருக்கும் சமாஜ்வாடி கட்சியின் வெற்றியின் பின்னணியில் ஓர் இளைஞர் இருக்கிறார் என்பதுதான் கவனத்திற்குரியது. கட்சித் தலைவரின் மகன் என்றபோதும் அந்த இளைஞரின் தனித்துவமான செயல்பாடுகள் இந்தப் பெருவெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளன.
தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருவதும், தேர்தல்களத்தில் திடீர் புகழைப் பெறுவதும் தமிழக மக்கள் உள்பட இந்தியாவின் பல மாநிலவாசிகளுக்கும் புதிதல்ல. ஆனால், 2014ல் இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ‘அரை இறுதி ஆட்டம்’ என வர்ணிக்கப்பட்ட உ.பி மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளான காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் ‘தண்ணி’ காட்டியிருக்கும் சமாஜ்வாடி கட்சியின் வெற்றியின் பின்னணியில் ஓர் இளைஞர் இருக்கிறார் என்பதுதான் கவனத்திற்குரியது. கட்சித் தலைவரின் மகன் என்றபோதும் அந்த இளைஞரின் தனித்துவமான செயல்பாடுகள் இந்தப் பெருவெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளன.

இந்தி ஒன்றே இந்தியாவின் மொழி என்ற கருத்தில் உறுதியாக இருப்பவர் முலாயம்சிங் யாதவ். ஆனால், அவர் தன்னுடைய மகன் அகிலேஷ்சிங்கை கர்நாடக மாநிலம் மைசூருக்கு அனுப்பி பொறியியல் பட்டம் பயில வைத்தார். கல்லூரியில் ஆங்கிலத்தை சரளமாகப் பயின்ற அகிலேஷ், அந்த மாநில மொழியான கன்னடத்தையும் கற்றுக்கொண்டார். சக நண்பர்களுடன் கன்னடத்தில் உரையாடுவதுடன், தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை ஆகியவற்றையும் விருப்பத்தோடு ஒரு பிடிபிடிப்பது அவருடைய வழக்கமானது. சைனீஸ் உணவுகளையும் வெளுத்துக் கட்டுவார்.
கல்லூரியில் கால்பந்து வீரராக இருந்த அவர், அந்த விளையாட்டில் மூக்குடைபட்டபோதும் தன் உடல்திறனுக்காகத் தொடர்ந்து விளையாடினார். பெரிய அரசியல் தலைவரின் பிள்ளை என்றபோதும், பொறியியல் பட்டம் பயின்ற அபிஷேக்கிற்கு அவருடைய அப்பா முலாயம், தாராளமாக பணம் தரவில்லை. மைசூரிலிருந்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தன் நண்பர் ஒருவரை தன் மகனுக்கு காப்பாளராக நியமித்து, வாரம் ஒரு முறை அவரை நேரில் பார்த்து, கைச்செலவுக்கானத் தொகையை வாங்கிக் கொள்ளச் சொல்வார். அதுவும் சொற்பமான தொகைதான். கல்வியில் கவனம் கட்டுப்பாடான செலவு என வளர்ந்தார் அகிலேஷ். அரசியல் செல்வாக்குள்ளவர்களின் வாரிசுகளின் கையில் பணம் குவிந்தால் இளம்வயதில் எப்படியெல்லாம் ஆட்டம் போடுவார்கள் என்பது நாம் அறிந்ததுதானே..
இந்திய அரசியல்வாதிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு குறைவுதான். ஆனால், அகிலேஷ்சிங் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் சென்று சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் பற்றிய மேற்படிப்பு பயின்றார். சூழலியலே எதிர்கால அரசியலைத் தீர்மானிக்கும் பெ
ரும்சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் அகிலேஷின் இந்தப் படிப்பு அவருக்கு அரசியல்ரீதியாகவும் உதவிகரமாக அமைந்தது. படிப்புக்குப்பிறகு வழக்கம்போலேவே இந்திய அரசியல் தலைவர்களின் வாரிசு வழியில் சமாஜ்வாடி கட்சிப் பணிகளில் முனைப்புக் காட்டினார். 2000ஆம் ஆண்டு கண்ணோஜ் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் அரசியலில் அவருடைய கணக்கு ஆரம்பமானது.தந்தை நிறைவேற்ற வேண்டிய கடமையாக, மகனின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி வைத்தார் முலாயம்சிங். அகிலேஷின் மனைவி டிம்பிள். அவர்களுக்கு அதிதி, மற்றும் டினா அர்ஜூன் என்ற இரட்டையர் என மூன்று குழந்தைகள்.
சமாஜ்வாடிகட்சியின் மூத்த தலைவர்களான அமர்சிங் போன்றவர்களுக்கும் முலாயம்சிங்கிற்கும் உரசகல்கள் ஏற்பட்டிருந்த நேரத்தில், அகிலேஷின் அரசியல் வளர்ச்சி எளிதாக இருந்தது. ஆங்கிலம் கணினி போன்றவற்றிற்கு எதிரான நிலையில் இருந்தார் முலாயம். அதனால் சமாஜ்வாடி கட்சியின் கொள்கையாகவே இது தோற்றமளித்தது. காலத்தின் மாற்றங்களை உணர்ந்த அகிலேஷ் தன்னுடைய ஓவர்கோட்டில் எப்போதும் ஒரு ஐ பேட் வைத்துக்கொண்டு, மின்னஞ்சல்களை சரிபார்ப்பதும் பதிலளிப்பதுமாக இருப்பார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதும் தகவல் தொழில்நுட்பத்திற்கு கணினியைப் பயன்படுத்துவதும் இளைஞர்களைக் கவர்ந்தது.
கட்சியின் முக்கியக் கொள்கைகளான பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் நலன் சிறுபான்மையினருக்கான உரிமைகள் ஒடுக்கப்பட்டோரின் விடுதலை மாநிலத்தின் வளர்ச்சி இவற்றிலிருந்து அவர் விலகவில்லை. கட்சியின் இளைஞர் அமைப்பைப் பலப்படுத்தியதுடன், அதனை நவீனப்படுத்தினார். புதிய பாதையில் சமாஜ்வாடியை வழிநடத்த ஆரம்பித்தார் அகிலேஷ். எனினும் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள நேர்ந்தது. யாதவ் சமுதாயத்தின் வாக்குகள் மிகுந்துள்ள ஃபெரோசாபாத் தொகுதியில் போட்டியிட்ட அவருடைய மனைவி டிம்பிள் யாதவை காங்கிரஸ் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்பாபர் தோற்கடித்தார்.
இந்தத் தோல்வியைத் தனது சொந்தத் தோல்வியாக நினைத்த அகிலேஷ், இதற்குக் காரணம் ராகுல்காந்திதான் என்று, “இனி உத்தரபிரதேசத்தில் எனக்கும் நேருவின் வாரிசுகளுக்கும்தான் யுத்தம்” என வெளிப்படையாகவே அறிவித்தார். 2012 சட்டமன்றத் தேர்தல் களத்திலும் ராகுல்காந்திக்கு கடும் சவாலாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னம் சைக்கிள். ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள சைக்கிளில் அகிலேஷ் 250 கி.மீ. பயணம் செய்திருக்கிறார். கிரந்தி ரதம் எனப்படும் 8 சீட்டுகளைக் கொண்ட நவீன சமையலறை டி.வி. சின்ன குளியலறை ஆகியவற்றைக் கொண்ட அந்த வாகனத்தில் 8000 கி.மீ சுற்றி பிரச்சாரம் செய்தார்.

எதிரிகளை சரியாக அடையாளம் கண்டு சவால்விடுவதும் அகிலேஷின் வழக்கம். சமாஜ்வாடி கட்சி வெற்றிபெற்றால், பொதுஇடங்களை ஆக்கிரமித்து பொதுமக்கள் பணத்தில் மாயாவதி தனக்காக வைத்துக்கொண்ட சிலைகளை அப்புறப்படுத்துவோம் என்று அறைகூவல் விடுத்தார். சமாஜ்வாடி கட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட மூத்த பிரமுகர்களான டி.பி.யாதவ், அமர்மணி திரிபாதி போன்றவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க அனுமதிக்கவில்லை அகிலேஷ். பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானையை சமாஜ்வாடியின் சின்னமான சைக்கிள் முந்துவதுபோன்ற தேர்தல் பிரச்சார விளம்பரத்தை நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கினார். இந்த விளம்பரம் பரவலான வரவேற்பைப் பெறவே, இதுபோலவே மக்களைக் கவரும் விளம்பரங்களையும் பிரச்சார உத்திகளையும் கையாண்டார்.
தனது தனித்துவமான நடவடிக்கைகள் அனைத்தும் தனது தந்தையின் தலைமையிலான கட்சிக்குப் பயன்படும் விதமாக மாற்றியதுதான் அகிலேஷ்சிங் யாதவ்வின் சிறப்பம்சம். அதுதான், சமாஜ்வாடி கட்சிக்கு தனிப்பெரும்பான்மையைப் பெற்றுத்தந்து அகிலேஷை உத்தரபிரதேசத்தின் புதிய நாயகனாக்கி, இந்திய அரசியல் வட்டாரமே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. வெற்றி பெறும்வரை எதிர்க்கட்சிகள் மீது ‘கருணை’ காட்டாமல் கொலைவெறியுடன் (ந்ண்ப்ப்ண்ய்ஞ் ண்ய்ள்ற்ண்ய்ஸ்ரீற்) வியூகம் வகுத்து செயல்பட்ட அகிலேஷ்சிங், தேர்தல் முடிவுகள் வெளியானதும் அளித்த பேட்டி மிக முக்கியமானது.
“மாயாவதி அமைத்துள்ள சிலைகளையும் மண்டபங்களையும் அடுத்துள்ள காலி இடத்தில் மக்களுக்குத் தேவைப்படும் கல்விநிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அமைப்போம்” என்றதன் மூலம், ஆக்கப்பூர்வமான பணிகளை எங்கள் அரசு மேற்கொள்ளும் எனக் கோடிட்டுக் காட்டியுள்ளார். அதுபோல, ராகுலின் வியூகங்களை நொறுக்கி அமேதி ரேபரேலி போன்ற காங்கிரசின் கோட்டைகளிலேயே அதனை மண் கவ்வவைத்துள்ள நிலையிலும், “ராகுல்காந்தி நல்ல இளம் தலைவர். இளைஞர்களை கவர்வதற்காக உழைக்கிறார். ஆனால், அவர் கடுமையாக வேலை செய்தால்தான் உ.பி. மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்” எனத் தெரிவித்திருப்பது, சக அரசியல் பிரமுகர்களை அவர் எப்படிப் பார்க்கிறார் என்பதைக் காட்டுகிறது.
அகிலேஷின் தந்தை முலாயம்சிங் மீது சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்ற குற்றச்சாட்டு எழுந்தது உண்டு. அவர் மீது சக கட்சிகள் நம்பிக்கை வைப்பது அரிது. தன் தந்தையின் பலவீனங்களை அறிந்து, அவற்றைத் தவிர்க்கும் அரசியல் தலைவராக அகிலேஷ் வளர்ந்து நம்பிக்கை மிகுந்த சக்தியாக ஒளிர்வாரா? அல்லது இந்திய அரசியலின் வழக்கமான வழியில் கரைவாரா? காந்திருந்து பார்ப்போம்.