நகைக் கடை குறித்து துப்பு கொடுத்தவர் திடீர் சாவு-தமிழக போலீஸாருக்கு சிக்கல்!

திருப்பூர்: திருப்பூர் ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளை குறித்து தமிழக போலீஸ் படைக்குத் துப்பு கொடுத்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபர் திடீரென மரணமடைந்தார். இதனால் அங்குள்ளவர்கள் தமிழக போலீஸாரை பிடித்துக் கொண்டனர். இருப்பினும் உள்ளூர் போலீஸாருடன் தமிழக போலீஸார் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் துப்பு கிடைக்காததால், கிடைத்த 3 கொள்ளையர்களுடன் திருப்பூர் கிளம்பி வரவுள்ளது தனிப்படை.

திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் நகைக் கடையையே காலி செய்து விட்டு நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பினர். இந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷேக் என்பவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கில் துப்பு துலங்கியது.

அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஓடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் போலீசில் சிக்கினார்கள்.

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வங்கதேசத்திற்கு கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டதாகவும தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஷேக், 2 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து விட்டார். அவரது உடலை கால்வாய் அருகே கண்டுபிடித்தனர். இது கொலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழக போலீஸாரை பிடித்துக் கொண்டனர்.

இதையடுத்து தனிப்படை போலீஸார் கோவையில் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து டிஐஜி ஜெயராம் விரைந்து சென்றார். அங்கு உள்ளூர்போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் தமிழக தனிப்படையினர் மீட்கப்பட்டனர்.

ஷேக் இறந்து விட்டதால் மேற்கொண்டு தகவல்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விசாரணை தேக்கமடைந்துள்ளது. இதையடுத்து கையில் சிக்கிய 3 கொள்ளையர்களுடன் திருப்பூர் திரும்ப தனிப்படை போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.

அவர்களை இங்கு கொண்டு வந்து தீவிரமாக விசாரித்து மேற்கொண்டு தகவல் பெற முடியுமா என்பதை போலீஸார் பார்க்கவுள்ளனர்.
 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: