சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு சிறப்பு சலுகைகள் பெண்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் சிறப்பு சலுகை, சலுகை விலையில் அழகு நிலையங்களில் சிறப்பு அழகு சிகிச்சை அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் ஏர் இந்தியா விமான நிறுவனம் பெண் ஊழியர்களை மட்டுமே கொண்ட 3 விமானத்தை இயக்க உள்ளது. நியூயார்க், லண்டன், சிங்கப்பூர் செல்லும் 3 விமானங்களையும் பெண் விமானிகளே இயக்க உள்ளனர் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் ஊழியர்கள் மற்றும் பணிப்பெண்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள் என்றும் ஏர் இந்தியா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிறப்பு பரிசுகள்
மகளிர் தினத்தையொட்டி, ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாடு பயணம் செய்வதற்காக 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்யும் பெண்களில், ஒவ்வொரு வகுப்பிலும் ஒருவருக்கு 5 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதுபோல் உள்நாட்டு பயணத்துக்கு பதிவு செய்யும் பெண்களுக்கு 10 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர் பிரான்ஸ் விமானங்களில் வியாழக்கிழமை பயணம் செய்யும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, டெல்லி, பெங்களுர் விமான நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.