மத்திய பாதுகாப்பு படை வருகை
சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி தொகுதியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர 10 பறக்கும் படையினர், 10 வீடியோ போலீஸ் படையினர், 5 அதிரடிப்படையினர், மணிமுத்தாறு பட்டாலியனை சேர்ந்த 4 கம்பெனி போலீசார், 3 கலவர தடுப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவு சிறப்பு படையினர் ஆகியோரும் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். சங்கரன்கோவிலில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், பாதுகாப்புக்காக வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர். மத்திய பாதுகாப்பு படையினரும் வருகின்றனர்.
இதுகுறித்து எஸ்பி விஜயேந்திரபிதரி கூறுகையில், ’’முதல்கட்டமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 5 கம்பெனியினர் வருகின்றனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன‘‘ என்றார்.
அடையாள அட்டை இருந்தால் அனுமதி
நெல்லை : சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக 242 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவின் போது ஒவ்வொரு வேட்பாளரும் வாக்குச்சாவடிக்கு ஒரு முகவரை நியமித்துக் கொள்ளலாம். அந்த முகவருக்கு மாற்றாக இருவரை நியமித்துக் கொள்ளலாம். எனினும் ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அமர முடியும். இந்நிலையில் வாக்குச்சாவடியில் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே முகவர்களை அனுமதிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது வேட்பாளர் நியமிக்கும் முகவர் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை அல்லது ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ் புத்தகம் அல்லது புகைப்படத்துடன் கூடிய ஆவணம் ஏதாவது ஒன்று வைத்திருக்க வேண்டும்.
போலீஸ் தடை; மதிமுக அதிருப்தி
சங்கரன்கோவில் : மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமாருக்கு ஆதரவாக வைகோ நேற்று சங்கரன்கோவில் யூனியனுக்குட்பட்ட சீவலராயனேந்தல், ராமநாதபுரம், நெடுங்குளம், திருமலைக்கொழுந்துபுரம், வேப்பங்குளம், புளியம்பட்டி, என்ஜிஓ காலனி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். களப்பாகுளத்திற்கு வைகோ சென்றபோது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே பாண்டு வாத்தியங்கள் முழங்கின. அங்கு திடீரென வந்த சங்கரன்கோவில் தாலுகா சப்,இன்ஸ்பெக்டர் ராஜாராம் பாண்டு வாத்தியங்களை பயன்படுத்த தடை விதித்தார். அங்கிருந்த தொண்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், வைகோவை நடைபயணமாக அழைத்து கிராமத்திற்கு சென்றனர். அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி வாக்கு சேகரிக்கும்போது, அமைச்சர்களை வரவேற்கும் விதமாக பாண்டு வாத்தியம் பயன்படுத்தப்பட்டது.