இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் சட்ட விரோதமாக வசித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்லேடனின் 3 மனைவிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் ராணுவ பயிற்சி மையம் அருகில் உள்ள வீட்டில் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டு மே 2ம் தேதி அமெரிக்க அதிரடி படையினர் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். பின்லேடனை சுட்டுக் கொன்றனர். பிறகு அவரது உடல் ஹெலிகாப்டரில் எடுத்து செல்லப்பட்டு கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
பின்லேடனுடன் தங்கியிருந்த 3 மனைவிகள், குழந்தைகள், பேரக் குழந்தைகளை அமெரிக்க வீரர்கள் பிடித்து பாகிஸ்தான் போலீசிடம் ஒப்படைத்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிந்து 3 பெண்களும் குழந்தைகளுடன் துபாய், ஏமன் செல்ல திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில், பாகிஸ்தானில் சட்ட விரோதமாக நுழைந்து குடியிருந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் நேற்று தெரிவித்தார். ‘‘சட்ட விரோதமாக பாகிஸ்தானில் தங்கியிருந்த குற்றத்துக்கு பின்லேடன் மனைவிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட நிபுணர்கள், புலனாய்வு அமைப்பினர் முடிவு செய்தனர். அதன்படி, 3 பேரும் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார் அவர்.