ஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு!' - நீதிபதி முன் கதறியழுத சசிகலா !


Sasikalaபெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஆதாரமாகக் காட்டப்படும் எதிலுமே ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று சசிகலா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைச் சொல்லிவிட்டு நீதிபதி முன்பு கதறி அழுதாராம் சசிகலா.  முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது நண்பர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 15 ஆண்டு கால இழுத்தடிப்புக்குப் பின் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அண்மையில் இந்த வழக்கில் இருமுறை நேரில் ஆஜராகி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வந்தார் ஜெயலலிதா. 

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை நிச்சயம் என்று கூறப்பட்ட நிலையில், அவருடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக உடன்பிறவா சகோதரி என்ற அந்தஸ்தில் இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டன் மற்றும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், இப்போது சசிகலாவிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளது பெங்களூர் தனி நீதிமன்றம். தனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது என்ற ஒரு காரணத்தைச் சொல்லியே 8 ஆண்டுகளுக்கு மேல் வழக்கை இழுத்தடித்து வந்தவர் சசிகலா. ஆனால் இனியும் வழக்கை இப்படி நீட்டிக்க முடியாது என அத்தனை நீதிமன்றங்களும் சொல்லிவிட்டன. 

எனவே வேறு வழியின்றி இந்த முறை சசிகலா, இளவரசு, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராகினர். 

கடைசி முயற்சியாக, 'சசிகலாவிடம் தமிழில் கேள்வி கேட்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து இருப்பதால் வழக்கை வருகிற மார்ச் 2-ந் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும்' என்று சசிகலா தரப்பு வக்கீல் மனு கொடுத்தார். அதை நீதிபதி தள்ளுபடி செய்தார். 

இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது. நீதிபதியின் கேள்விகளை சசிகலாவுக்கு தமிழில் மொழிப் பெயர்த்துச் சொல்ல ஹரீஸ் என்ற மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நீதிபதியின் கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார். 

சசிகலா தந்த பதில்களை ஆங்கிலத்தில் நீதிபதிக்கு மொழிபெயர்த்தார் ஹரீஸ். 

கதறி அழுத சசி

பல கேள்விகளுக்கு நினைவில்லை என்றும், தெரியாது என்றும் கூறிய சசிகலா, ஜெயலலிதா தொடர்பாக கேட்டபோது கதறி அழுதாராம். 

வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசிகலா கண்ணீர் விட்டு அழுதார்.

ஜெயா பப்ளிகேஷன்ஸ் விவகாரங்களை கவனித்துக் கொண்டது நான்தான் என்றும், ஜெயலலிதாவுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளி சசிகலா. முதல் குற்றவாளி ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: