பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலா, அவரது அண்ணன் மனைவி இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோர் நாளை ஆஜராகவுள்ளனர். அவர்களிடம் 400 கேள்விகளுக்கும் மேல் கேட்கப்படவுள்ளது.ஜெயலலிதாவால் துரத்தப்பட்ட பின்னர் சசிகலா நாளை முதல் முறையாக சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகவுள்ளதால், அவர் என்ன சொல்லப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விரோதமாக அவர் எதுவும் சொல்ல மாட்டார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகிறது. இதில் நான்கு பேருமே ஆஜராகாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இவர்களிடம் வாக்குமூலம் பெறுமாறும், அதற்கு நான்கு பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டது.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா முதல் முறையாக கோர்ட்டில் ஆஜரானார். இவருக்காக தனி நீதிமன்றத்தை தற்காலிகமாக பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாக கோர்ட்டுக்கு மாற்றியிருந்தனர். மொத்தம் நான்கு நாட்கள் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அப்போது இந்த சொத்துக்களுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அவர் கூறி விட்டார்.
இந்த நிலையில் சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படவிருந்தது. ஆனால் விசாரணையை தமிழில் நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் விசாரணையில் பங்கேற்குமாறு அவருக்கு கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து நாளை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜராகிறார்கள். அப்போது நீதிபதி மல்லிகார்ஜுனய்யா இவர்களிடம் விசாரணை நடத்துவார். இவர்களிடம் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மொழிபெயர்ப்பாளர் ஹரீஷ் இந்த வழக்கில் உதவியாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின்போது சசிகலா என்ன சொல்லப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அவர் ஜெயலலிதாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பார் என்று ஒரு எதிர்பார்ப்பும், இல்லை விரோதமாக பதிலளிக்க மாட்டார் என்று இன்னொரு எதிர்பார்ப்பும் உள்ளது.