இந்தியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட 53 மெகா நகரங்களில் 2011-ல் பதிவான குற்றங்கள் அடிப்படையில், டெல்லியில்தான் திட்டமிட்ட வன்முறைகள் (10 சதவிகிதம்) அதிகம் நடந்துள்ளன.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மேற்கு வங்காளத்தில் அதிகமாக உள்ளன. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவிகிதம் மக்கள் தொகையை கொண்டிருக்கும் ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் பங்கு 12.4 சதவிகிதம் ஆகும்.
மத்திய பிரதேச மாநிலம், கற்பழிப்புகளின் தலைநகரமாக விளங்குகிறது. 2007 ம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டுவரை மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் 15 ஆயிரத்து 275 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் பதிவான பாலியல் வன்முறை வழக்குகளில் 14.1 சதவிகிதம் ஆகும். அதேபோல் மேற்கு வங்கத்தில் 11 ஆயிரத்து 427 வழக்குகள் பதிவாகியுள்ளன.
உத்திரபிரதேசத்தில் 8,834 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 7,703 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேசமயம் 2011 ம் ஆண்டு மட்டும் புது டெல்லியில் 568 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2010 ஆண்டை விட அதிகமாகும்.மேலும்ஆந்திராவில் பாலியல் வன்முறைகள் அதிகளவில் நடைபெற்றுள்ளன.
தினமும் சராசரியாக தற்கொலை செய்து கொள்பவர்கள் மற்றும் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1442 ஆகும். ரெயில் மற்றும் சாலை விபத்துக்களில் தினமும் 452 பேர் பலியாகின்றனர். 1,298 பேர் காயமடைகின்றனர். தினமும் 372 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் குடும்ப தலைவிகள்.
கடந்த 2011-ல் இந்தியா முழுவதும் 62.5 லட்சம் குற்றங்கள் பதிவாகின. இதில் 3-ல் ஒரு பங்கு உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளன. மெகா நகரங்களில் திட்டமிட்ட குற்றங்கள் நடைபெற்றதில் டெல்லி முதலிடம் வகிக்கிறது. கடுமையான குற்றங்கள் என்ற பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
அதேபோல் 2007 முதல் 2011 ம் ஆண்டு வரை 18 முதல் 30 வயதுடைய 75 ஆயிரத்து 257 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 முதல் 45 வயது வரை உடைய 38 ஆயிரத்து 845 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தேசிய குற்றப் பதிவேடுகள் ஆணையத்தின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.