கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இனக்குழுக்கள் இடையிலான மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கபப்ட்டிருக்கிறது. அசாமின் போடோலாண்டு பிரதேச குழு நிர்வகித்து வரும் மாவட்டங்களில் பழங்குடி இனத்தவருக்கும் சிறுபான்மையினத்தவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று போடோ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 4 பேர் வெள்ளிக்கிழமையன்று சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த வன்முறை வெடித்தது.
கோக்ராஜ்கர் மாவட்டத்தில் வன்முறை அதிகளவு வெடித்ததால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. கலவரத்தை ஒடுக்க துணை ராண்வ படையும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறையில் 21 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று ராஜதானி எக்ஸ்பிரஸ் மீது அடையாளம் தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதையடுத்து இன்று வடகிழக்கு மாநிலங்களில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனிடையே அசாம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில முதல்வர் தருண் கோகயை பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார்.