
சென்னை: சென்னையில் 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதியின் மரணத்திறக்குக் காரணமானவர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.மாணவி ஸ்ருதியின் அகால மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சேலையூர் ஜியோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த முடிச்சூரைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்திலிலிருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியும், சோகமும் அடைந்தேன்.
சிறுமி ஸ்ருதியின் மறைவுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சிறுமி ஸ்ருதியின் மரணத்திற்குக் காரணமானோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பழுதான பேருந்தை இயக்கக் காரணமானோர் மீது கல்வித்துறை மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.