திருநெல்வேலி: துபாயில் நண்பர்களுடன் ஆபாசப் படம் பார்த்தார் நெல்லையைச் சேர்ந்த ஒருவர். அந்த ஆபாசப் படத்தில் இடம் பெற்றிருந்த பெண் தனது மனைவியின் சாயலில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே தனது சொந்த ஊருக்குப் பறந்து வந்து, அது நீயா என்று கேட்டு மனைவியை ஒரு வாரம் வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்தார். அவரை போலீஸார் கைது செய்தனர்.நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் மகபூப் சுபுகானி. 28 வயதான இவரை ஞானியார் என்பவருக்குக் கட்டிக் கொடுத்தனர். 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, நான்கு குழந்தைகளும் உள்ளனர்.
ஞானியார் துபாயில் வேலை பார்க்கிறார். அங்கு அவர் தங்கியிருந்த அறையில் நண்பர்களுடன் ஒரு ஆபாசப் படத்தை சிடியில் போட்டுப் பார்த்துள்ளார். அப்போது அந்த ஆபாசப் படத்தில் நடித்திருந்த பெண் அப்படியே ஞானியாரின் மனைவி போல இருந்தாராம். இதனால் குழம்பி விட்டார் ஞானியார். ஒருவேளை தனது மனைவிதானா என்று குழப்பமான அவர் உடனே விடுப்பு போட்டு விட்டு ஊருக்குப் பறந்து வந்தார். கையோடு சிடியையும் எடுத்து வந்தார்.
வீட்டுக்கு வந்த அவர் முதல் வேலையாக மனைவியிடம் அந்த சிடியைப் போட்டுக் காட்டி இது நீதானா என்று கேட்டுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண், இல்லை என்று மறுத்துள்ளார். இருந்தாலும் விடாமல் ஞானியார் போட்டு தொந்தரவு செய்யவே இல்லை என்று மீண்டும் மறுத்துள்ளார்.
ஆனாலும் திருப்தி அடையவில்லை ஞானியார். தனது மனைவியை அறைக்குள்ளேயே போட்டு பூட்டி வைத்து கடந்த ஐந்த நாட்களாக சாப்பாடு தராமல், அடித்துத் துன்புறுத்தியுள்ளார். ஞானியாரின் தம்பியும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார். மேலும் தனக்கு விவாகரத்து கொடுக்குமாறும், தன்னை விட்டுப் பிரிந்து போய் விடுமாறும் ஞானியார் மனைவியை சித்திரவதை செய்துள்ளார்.
தகவல் அறிந்தத மகபூப் சுபுகானியின் அண்ணன் தங்கையின் வீட்டுக்கு விரைந்து வந்தார். அறைக்குள் அடைக்கப்பட்டிருந்த தனது தங்கையை மீட்டார். பின்னர் நேராக போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் ஞானியாரையும், அவரது தம்பியையும் கைது செய்தனர்.
சந்தேகப்பட்டு மனைவியை அடைத்து வைத்துக் கொடுமை செய்த கணவரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.