புதுடில்லி : நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, இன்று காலையில் துவங்கியது. தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெ., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்தனர். பிரணாப் முகர்ஜிக்கும், சங்மாவுக்கும் இடையே, நேரடி போட்டி நிலவுவதால், விறு விறுப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.,க்கள் டில்லியில் பார்லி., வளாகத்தில் தங்களின் ஓட்டுக்களை போட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 31 இடங்களில் ஓட்ச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.,க்கள் மாநிலங்களிலும், எம்.பி.,க்கள் தங்களின் அனுமதிக்கேற்ப ஆங்காங்கே ஓட்டளித்து வருகின்றனர்.ஐ.மு., கூட்டணி சார்பில், பிரணாப் முகர்ஜியும், பா.ஜ., ஆதரவுடன், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சங்மாவும் போட்டியிடுகின்றனர். எம்.பி.,க்கள், டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகத்திலும், எம்.எல். ஏ.,க்கள், அந்தந்த மாநில தலைநகரங்களில் உள்ள தலைமைச் செயலகங்களிலும், ஓட்டளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப் பதிவு, காலை 10 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை நடக்கிறது. சில மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.,க்கள், தங்கள் மாநிலத்திலேயே ஓட்டளிக்க அனுமதி பெற்றுள்ளனர். இவர்கள், தங்கள் மாநிலத்திலேயே ஓட்டளிக்கலாம். ஓட்டுச் சீட்டு முறைப்படி தேர்தல் நடக்கிறது. டில்லியிலும், அனைத்து மாநில தலைநகரங்களிலும், ஏற்கனவே ஓட்டுப் பெட்டிகளும், ஓட்டுச் சீட்டுகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, ஓட்டளிப்போரின் கை விரல்களில், அடையாள மை எதுவும் இடப்படாது. ஓட்டுச் சீட்டில், பிரணாப் முகர்ஜியின் பெயரும், சங்மாவின் பெயரும் இருக்கும். மக்கள் பிரதிநிதிகள், இவர்களில் யாருக்கு ஓட்டளிக்க விரும்புகின்றனரோ, அவர்களின் பெயருக்கு முன், 1 என்ற எண்ணை எழுதி, ஓட்டுப் பெட்டியில் போட வேண்டும். குறிப்பிட்ட வேட்பாளருக்கு தான், ஓட்டளிக்க வேண்டும் என, எந்த ஒரு அரசியல் கட்சியும், தங்களின் பிரதிநிதிகளை கட் டாயப்படுத்த முடியாது என்பதால், எம்.எல்.ஏ.,க்களும். எம்.பி.,க்களும், சுதந்திரமாக ஓட்டளிக்கலாம். ஓட்டுப் பதிவு முடிந்ததும், பெட்டிகள் சீலிடப்பட்டு, டில்லிக்கு அனுப்பப்படும். வரும், 22ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.