லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய அணியினர் நடந்து வந்தபோது அவர்களுடன் சேர்ந்து ஜீன்ஸ், டாப்ஸில் வந்த மர்மப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவர், அவரது பெயர் மதுரா ஹனி என்று தெரிய வந்துள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின்போது ஒவ்வொரு நாட்டு அணியினரும் தங்களது பாரம்பரிய உடையணிந்து அணிவகுத்து வந்தனர்.
இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில் குமார் தேசியக் கொடியேந்தி தலைமை தாங்கி நடந்து வந்தார். அவருடன் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகள் உடன் வந்தனர். அப்போது சுஷில் குமாருக்கு அருகே, ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து ஒரு இளம் பெண் வந்தார். இது இந்திய அணியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடையே பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
யார் இந்தப் பெண் என்று அனைவரும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து இந்தியக் குழுவின் பொறுப்பாளரான மேஜர் முரளிதர் ராஜாவும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
இந்திய அணியுடன் நடந்து வந்த அந்த பெண் யார் என்று தெரியவில்லை. இது குறித்து நாங்கள் ஒலிம்பி்க் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசி உள்ளோம். இந்திய அணியுடன் அவர் நடந்து வர யார் அனுமதி அளித்தார் என்று தெரியவில்லை. இந்திய அணியின் வீரர்கள், வீராங்கனைகள் உடன், அந்த மர்ம பெண் நடந்து வந்தது அணிக்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.
அணிவகுப்பில் இந்திய அணியுடன் அந்த பெண்ணும், மற்றொரு நபரும் நடந்து வருவதாக இருந்தது. ஆனால் அவர்களை அணிவகுப்பு களத்திற்குள் வர கூடாது என்று கூறியிருந்தேன். இதையடுத்து அந்த நபர் அணிவகுப்பிற்கு வரவில்லை. ஆனால் எங்களின் தடையும் மீறி மர்ம பெண் மட்டும் வந்துள்ளார்.
ஒலிம்பிக் அணிவகுப்பில், போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆனால் இந்திய அணிவகுப்பு முழுவதும் அந்த பெண் நடந்து வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றார்.
இந்த நிலையில் அப்பெண் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், பெயர் மதுரா ஹனி என்றும் தெரிய வந்துள்ளது. தற்போது லண்டனில் வசித்து வரும் அவர் தனது தோழியுடன் ஊடுறுவு உள்ளே புகுந்துள்ளார். முதல் வரிசையில் மதுரா வர தோழி பின்தங்கி அப்படியே நின்றுள்ளார்.
ஒலிம்பிக் பாஸ் பெற்று அவர் உள்ளே புகுந்துள்ளதாக தெரிகிறது. இந்த பாஸை அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் கூட முதலில் பிரசுரித்திருந்தார். ஆனால் தான் அணியினரோடு நடந்து போனது சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த பக்கத்தை எடுத்து விட்டார்.