இந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர்...!

 Minister Absentia As Railways Runs Amok கொல்கத்தா: அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள், சற்றும் அலட்டிக் கொள்ளாத ஒரு ரயில்வே அமைச்சர். மிக்க கொடுமையான ஒரு அமைச்சரை நமது நாட்டு மக்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மக்களைப் பார்த்து பரிதாபம்தான் வருகிறது.
இந்திய ரயில்வேயின் அமைச்சராக எத்தனையோ பெரிய மனிதர்கள் இருந்துள்ளனர். ஒரே ஒரு விபத்து நடந்தது என்பதற்காக தனது அமைச்சர் பதவியை தார்மீகப் பொறுப்பேற்று உதறியவர் நிதீஷ் குமார். இன்றளவும் மக்கள் மனதில் அவர் நிற்கிறார். சமீப காலத்தில் மக்களுக்குத் தெரிந்த நல்லதொரு ரயில்வே அமைச்சர் அவர்தான்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக 2வது ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் பதவியேற்றுள்ள ரயில்வே அமைச்சர்கள் மக்கள் படாபாடு படுகின்றனர். காரணம், இந்த அமைச்சர்கள் யாருமே டெல்லியில் இல்லை. கொல்கத்தாவிலிருந்துதான் செயல்படுகின்றனர். டெல்லியில் உள்ள தங்களது அமைச்சர் அலுவலகத்திற்கே வருவதில்லை. எப்போதாவதுதான் வருகின்றனர்.
முதலில் மமதா பானர்ஜி ரயில்வே அமைச்சரானார். இவர் அமைச்சர் பதவியை ஏற்றது முதல் பதவியிலிருந்து போகும் வரை டெல்லி துறை அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்த்ததில்லை. ரயில்வே பட்ஜெட்டைக் கூட கொல்கத்தாவில் உட்கார்ந்துதான் போட்டார். இவர் டெல்லி அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்த்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அடுத்து இவர் போய் வந்த ரயில்வே அமைச்சரை அதே வேகத்தில் தூக்கி எறிந்தார் மமதா. தான் சொன்னதை அவர் கேட்கவில்லை என்பதே அதற்குக் காரணம். மமதாவைப் பகைத்துக் கொள்ள முடியாத பிரதமரும், மமதாவின் டியூனுக்கு ஆட நேரிட்டது.
அடுத்து வந்தவர்தான் முகுல் ராய். இவரும், தனது தலைவி வழியிலேயே செயல்பட்டு வருகிறார். டெல்லி பக்கமே இவரைப் பார்க்க முடிவதில்லை. எப்போதும் கொல்கத்தாவில்தான் அடை காத்தபடி கிடக்கிறார். ரொம்ப ரொம்ப அரிதாகத்தான் இவர் டெல்லிக்கே வருகிறார்.
முகுல் ராய் பதவியேற்றது முதல் அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள். எது குறித்தும் அவர் அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறை, ஊழியர்களின் கவனக்குறைவு என பல காரணங்கள் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு சாதனங்களை பொருத்துவதிலும் மகா அலட்சியமாக செயல்படுகிறது ரயில்வே துறை.
பாதுகாப்புக் குறைபாடு, ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக 2009-10ல் 69 சதவீத விபத்துக்களை இந்திய ரயில்கள் சந்தித்துள்ளன. இது 2010-11ல் 61 சதவீதமாகவும், 2011-12ல் 64 சதவீதமாகவும் இருந்துள்ளது.
கடந்த மார்ச் 20ம் தேதி பதவியேற்றார் முகுல் ராய். அன்றே உ.பியில் ஹத்ராஸ் அருகே நடந்த ரயில் விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். மே மாதம் ஹம்பி எக்ஸ்பிரஸ் மற்றும் டூன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் விபத்தைச் சந்தித்தன. அப்போதும் முகுல் ராய் அலட்டிக் கொள்ளவில்லை. விபத்து தடுப்பு மற்றும் எச்சரிக்கை பாதுகாப்பு சாதனங்களை ரயில்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார் முகுல் ராய். ஆனால் இதுவரை அதுதொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2009ம் ஆண்டு மத்தியில் ரயில்வே அமைச்சகத்தை திரினமூல் காங்கிரஸ் பெற்றது. அன்று முதல் ரயில்வேயின் அன்றாடப் பணிகள், முக்கியத் திட்டங்கள் அனைத்துமே மேற்கு வங்கத்தை மட்டுமே மனதில் கொண்டு உருவாக்கப்படுகின்றன, செயல்படுத்தப்படுகின்றன. மற்ற மாநிலங்கள் குறித்து மமதாவோ அவரது கட்சியோ சற்றும் கவலைப்படுதில்லை என்று ரயில்வே உயர் அதிகாரிகளே குமுறுகின்றனர்.
ரயில்வே அமைச்சரே படு சோம்பேறியாக, அலட்சியமாக இருப்பதால் ரயில்வே வாரியம் பல பணிகளில் அக்கறை காட்டாமல் மெத்தனமாக இருக்கிறது. ரயில்வே துறை இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான காலகட்டத்தில் இருப்பதாகவும் உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ரயில்களில் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்துவது தொடர்பாக முகுல் ராய்க்கு முன்பு சில மாத காலம் ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி இருந்தபோது ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்திருந்தார். அதை முகுல் ராய் பரிசீலிக்கக் கூட செய்யாமல் நிராகரித்து விட்டார். அதேபோல ரூ. 20,000 கோடி செலவில் பல்வேறு பாதுகாப்புப் பணிகள் குறித்த அனில் ககோத்கர் அறிக்கையையும் கிடப்பில் போட்டு வைத்துள்ளார் முகுல் ராய்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ற வகையில் முறைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையாம்.
நேற்று நெல்லூரில் நடந்த விபத்தும் கூட மின்கசிவு காரணமாகத்தான் என்று கூறுகிறார்கள். அதேசமயம், ரயிலில் தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கக் கூடிய, அணைக்கக் கூடிய சாதனங்கள் எதுவும் இல்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்று நெல்லூரில் அதிகாலை 4.30 மணிக்கு விபத்து நடந்தது. ஆனால் ரயில்வே அமைச்சராக இருந்த முகுல் ராய் கொல்கத்தாவில் உட்கார்ந்தபடியே பேசிக் கொண்டிருந்தார். அங்கிருந்து அவர் உடம்பை அசைத்து கிளம்பி நெல்லூருக்கு வந்து சேர 12 மணி நேரம் பிடித்துள்ளது. மக்கள் குறித்து எவ்வளவு அலட்சிய மனோபாவம் பாருங்கள் இந்த அமைச்சருக்கு...
தனது கட்சியினரோடும், முதல்வர் மமதாவோடும் அவர் நேற்று முழுக்க நேரத்தை செலவிட்டதாக கூறுகிறார்கள். ரயில் விபத்து நடந்து விட்டது, உடனே கிளம்ப வேண்டும் என்ற எண்ணமே இவருக்கு இல்லை என்கிறார்கள்.
ஏன் லேட் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு சென்னைக்கு கொல்கத்தாவிலிருந்து முதல் விமானமே மாலை 3 மணிக்குத்தான். அதைப் பிடித்துதான் நான் வர வேண்டியிருந்தது என்றார். ஒரு வேளை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு விமானம் இல்லை என்றால் வந்திருக்கவே மாட்டாரோ என்னவோ...
முகுல் ராயின் நிர்வாகம் படு மோசமாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகளே புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இவர் ரயில்வே அமைச்சராகவே செயல்படவில்லை, மிகவும் மெத்தனமாக இருக்கிறார். எப்போது பார்த்தாலும் கொல்கத்தாவில்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், மமதாவை கேட்டுத்தான் எதையும் செய்கிறார் என்று புலம்புகின்றனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: